Published : 05 Feb 2021 06:33 PM
Last Updated : 05 Feb 2021 06:33 PM
தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டதாகவும், பட்டுப் புடவையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும், சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதேபோல அவரது தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வறிக்கைகள், பிப்ரவரி 10-ம் தேதி வந்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 11-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT