Published : 05 Feb 2021 05:48 PM
Last Updated : 05 Feb 2021 05:48 PM
திமுக தலைவர் ஸ்டாலின் 10 தினங்களுக்கு முன் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறிவந்தார். இதையடுத்தே அரசு, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக உதயநிதி பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவரும் திமுக இளைஞரணிச் செயலாளர் இன்று (பிப். 05) உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியசெவலை, எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, "திமுக ஆட்சியின்போது மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி முதல்வர் அக்கறை கொள்ளவில்லை.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியினருக்கு தமிழக மக்கள் மீது வெறுப்பு உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டியதன் எதிரொலியாக தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்களைச் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதிமுக அரசைப் பொறுத்தவரை, திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் சார்ந்த பிரச்சினை குறித்து முதலில் குரல் கொடுத்தபின், அதை உடனே செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். உடனே செய்துவிட்டால் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பெயர் கிடைத்துவிடுமோ என எண்ணி, காலம் தாழ்த்தி, தற்போது தேர்தல் நேரத்தில் ரூ.2,500 வழங்கியுள்ளனர்.
அதேபோன்று, மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அரசு உடனடியாகச் செய்யாமல், காலம் தாழ்த்தி தேர்வை ரத்து செய்தது. அதேபோன்றுதான் தற்போதும் செய்துள்ளனர்.
கடந்த 10 தினங்களுக்கு முன் விவசாயிகள் மாளாத் துயரில் இருப்பதால், அவர்களது கடனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தற்போது அரசு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் ஸ்டாலின் கூறிய பின்னர்தான் அரசு விழித்துக் கொண்டு செயல்படுகிறது" என்று உதயநிதி தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன், திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் வசந்தவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT