Published : 05 Feb 2021 04:09 PM
Last Updated : 05 Feb 2021 04:09 PM
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று அம்முக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
தென்காசி மாவட்டம், பண்பொழியில் உள்ள திருமலைக்குமார சுவாமி கோயிலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசிகலா நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவார். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சசிகலா முடிவு செய்வார். சசிகலாவின் வருகையை அமமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் உண்மையாக தொண்டர்கள், தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அவர் வந்தவுடன் தமிழகத்தில் பெரிய வேதியியல் மாற்றம் உருவாகும். அனைத்துக்கும் நல்ல விதமான முடிவு வரும். திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்போம்.
கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால், மக்கள் ஒருவரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது தேர்தலுக்கான நடவடிக்கையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம். அதிமுகவை ஜனநாயக வழியில் மீட்டெடுப்பதற்கான ஆயுதம்தான் அமமுக. அந்தப் பணியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
அதிமுக கொடியை சசிகலா பயன்படுதுவது தொடர்பாக டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் அளித்தை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் வேண்டுமானால் நீதிமன்ற கதவுகளை தட்டட்டும்.
அதிமுக கட்சி குறித்த வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தில் கியூரேட்டிவ் பெட்டிஷன் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. விடியலை நோக்கி என்ற பெயரில் ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்வது திமுகவுக்கு விடியலை தராது.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT