Published : 05 Feb 2021 03:56 PM
Last Updated : 05 Feb 2021 03:56 PM
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுகளில் கூடுதலாக 2,369 துணை வாக்குச் சாவடிகள் சேர்த்து 1,053 இடங்களில் 6,123 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுவதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பான அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இ,ஆ,ப., தலைமையில் இன்று (05.02.2021) அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இந்தியத் தேர்தல் ஆணையம் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துணை வாக்குச்சாவடி அமைக்க அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுகளில் ஏற்கெனவே 901 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தற்பொழுது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டிய நிலையில் 2,369 துணை வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வாக்குச்சாவடிகள் கூடுமானவரை ஏற்கெனவே வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தற்பொழுது 1,053 இடங்களில் மொத்தம் 6,123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உட்பட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும்.
இது தொடர்பாக வாக்குச்சாவடி மையங்களில் வரைவுப் பட்டியலும் ( Draft list of Polling Stations) அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும். மேலும், அரசியல் கட்சிகளின் ஆலோசனை மற்றும் கருத்துகளை இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பெர்மி வித்யா, மண்டல அலுவலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT