Published : 05 Feb 2021 02:49 PM
Last Updated : 05 Feb 2021 02:49 PM
புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (பிப். 5) அண்ணா சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, "துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த நான்கரை ஆண்டுகளாக மாநில வளர்ச்சியைத் தடுப்பது, மாநில முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுவது, மக்களின் உரிமையைப் பறிப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைப் போன்றவைகளைக் கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்.
பல முறை ஆளுநரை நேரடியாக சந்தித்து உங்களுடைய அதிகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை, எங்களுடைய அதிகாரத்தில் நீங்கள் தலையிடக் கூடாது எனக் கூறியும் அதனை ஏற்கவில்லை.
அவருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையைப் பறிப்பது, கோப்புகளை திரும்பி அனுப்பவது, மக்களுக்கான அதிகாரத்தைப் பறிப்பது, மாநில அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுப்பது என ஜனநாயக விரோதமான வேலைகளில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார்.
ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு, அதனை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்பது அரசின் கோரிக்கை.
ஆனால், கிரண்பேடியோ, பொதுமக்களை வஞ்சிக்கிற வகையில் அதிகாரிகளை அழைத்து ரூ.1,000 வசூலிக்க உத்தரவிடுகிறார். இதனால் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என பாஜகவே, பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறது. எனவே, ஆளுநர் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட புதுச்சேரியில் தங்கக் கூடாது. அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
ஏ.வி.சுப்பிரமணியன் பேசும்போது, "ஹெல்மெட்டுக்கு ரூ.1,000 அபராதம் என்று ஆளுநர் கிரண்பேடி மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார். வருமானம் இல்லாத காலத்தில் ரூ.1,000 அபராதம் என்பது மிகப்பெரிய தொகை. 100-க்கும் மேற்பட்ட கோப்புகள் ஆளுநரிடம் முடங்கியுள்ளது. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவிடாமல் தடுத்து வருகிறார். 9,200 காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்தும் வருகிறார்.
மத்திய பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட'த்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், புதுச்சேரியில் ரேஷன் கடையே இல்லாத நிலைக்கு ஆளுநர் தள்ளியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ராஜ்நிவாஸில் போட்டி அரசு நடத்தி கொண்டிருக்கிறார். தமிழ் தெரிந்த அதிகாரிகளை அவமானப்படுத்தி வருகிறார்.
புதுச்சேரியை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக உள்ளது. பாஜக என்பது யாரும் ஏற்றுக் கொள்ளாத கட்சிதான். பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். யாரெல்லாம் பாஜகவுக்கு செல்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தல் போல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை" எனப் பேசினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் எம்எல்ஏ-க்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ராஜாங்கம், முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், சிபிஐ (எம்-எல்) செயலாளர் பாலசுப்ரமணியன், மதிமுக செயலாளர் கபிரியேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT