இந்திய ரூபாய்களில் நேதாஜியின் புகைப்படம்: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்திய ரூபாய்களில் நேதாஜியின் புகைப்படம்: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படத்தை பதிப்பது தொடர்பான மனுவை பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ். உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் 1897-ல் பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய படையை உருவாக்கி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயேர்களை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டார். இப்படையைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள்ளும், வெளி நாடுகளிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் நேதாஜி ஈடுபட்டார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பல்வேறு அளப்பரிய பணிகளையும் நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய படை செய்தது.

நேதாஜியின் இறப்பு தற்போது வரை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. நேதாஜியை கவுரவிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in