Published : 05 Feb 2021 02:40 PM
Last Updated : 05 Feb 2021 02:40 PM

எம்ஜிஆர் இல்லம் முன் சசிகலா கொடியேற்ற அமைக்கப்பட்ட கொடிக்கம்பம்: அகற்றக்கோரி எம்ஜிஆர் குடும்பத்தினர் வழக்கு

சென்னை

சென்னை திரும்பும் சசிகலா, எம்ஜிஆர் இல்லம் முன் கொடியேற்ற அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் இடைஞ்சலாக உள்ளதாக அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்ஜிஆர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலை ஆனார். கரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் வரும் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை திரும்புகிறார். அவர் வரும்போது வழியெங்கும் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சசிகலா வழிநெடுகிலும் அங்காங்கே கொடியேற்றவும் உள்ளார். அவ்வாறு வரும் சசிகலா கொடியேற்ற வசதியாக, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் இல்லம் அமைந்துள்ள ராமாவரம் தோட்டம் நுழைவுவாயில் அருகே உள்ள நடைபாதையில் அமமுக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் லக்கி முருகன் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளார்.

அந்தக் கொடிக்கம்பம் தங்கள் இல்லத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியும், நடைபாதைக்கு இடைஞ்சலாகவும் உள்ளதால் அதை அகற்றக்கோரி எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் பரங்கிமலை துணை ஆணையர், நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

இந்நிலையில் அதே இடத்தில் லக்கி முருகன் மீண்டும் கொடிக்கம்ப மேடையைக் கட்டியுள்ளதால், தங்களது அனுமதி இல்லாமல் மீண்டும் உருவாக்கியுள்ளதால் அந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு வழக்கறிஞர் இளங்கோவன் முறையிட்டார்.

அதனை ஏற்ற அமர்வு, வழக்கை வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 8) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x