Published : 05 Feb 2021 12:32 PM
Last Updated : 05 Feb 2021 12:32 PM
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நாத்திகனின் மனைவி கிருத்திகா மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின்போது, கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. ஒரே ஒரு வழக்குப் பதிவு செய்துவிட்டு அதை வைத்து குண்டர் சட்டம் போடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை தரப்பில், ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்ததற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கக் கூடாது என விதிகள் இல்லை என்றும், கறுப்பர் கூட்டத்தினரின் செயல்பாடு குறிப்பிட்ட மதத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி, கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தின் அடிப்படையில், இருவர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஒரே வழக்கிற்காக குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து உள்துறைச் செயலாளரிடம் அளித்த மனு மீது உரிய காலத்தில் முடிவு எடுக்கவில்லை என விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT