Published : 05 Feb 2021 12:04 PM
Last Updated : 05 Feb 2021 12:04 PM

ஏழு பேர் விடுதலை; சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

சென்னை

ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து அறிவிப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் தனது பதிலில் எழுவர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் எனத் தெரிவித்துவிட்டார். இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முடிவு எடுக்காமல் உள்ளார்.

இதனிடையே, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜன.21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார்’ என்று மத்திய அரசு உறுதியளித்தது.

இதை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் உறுதி செய்தார். இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமைச் செயலர் கே.சண்முகம், முதல்வரின் செயலர் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ்பவனில் சந்தித்துப் பேசினர்.

ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என முதல்வர் பழனிசாமி பதிலளித்திருந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் ஆளுநர் சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதில் எழுவர் விடுதலை குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பதில் அளித்துள்ளார். இது குறித்து சட்டரீதியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டரீதியான ஆலோசனை பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x