Published : 05 Feb 2021 07:58 AM
Last Updated : 05 Feb 2021 07:58 AM

கல்குவாரி மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்; மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை

காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம் அருகே மதூர் பகுதியில் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். அதில் ஒரு லாரி உட்பட சில வாகனங்கள் சிக்கி இருப்பதால் வேறு சில நபர்கள் யாராவது சிக்கி இருக்கலாம் என்றும், சரிந்த மண் முழுவதையும் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் திருமுக்கூடல் அருகே பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல கல்குவாரிகள் விதிகளை மீறி
யும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமலும் செயல்பட்டு வருகின்றன என்று அந்தப் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமுக்கூடல் அருகே உள்ள மதூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் கற்களை ஏற்றி வருவதற்காக 5 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் உட்பட சில வாகனங்கள் நின்றிருந்தன. இந்த கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மண், கல்குவாரி பள்ளத்தின் மேற்பரப்பில் கொட்டப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் பாரம் தாங்காமல் அந்த மண்ணும் கல்குவாரியின் ஒரு பகுதியும் சரிந்தது.

இதில் வாலாஜாபாத், திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்பவர் உயிரிழந்தார். இவருக்கு அபிராமி என்ற மனைவி
உள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இங்கு பணி செய்துவந்தார். மேலும், சோனா அன்சாரி,சுரேஷ் ஆகிய இருவர் காயமடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த மண் சரிவின்போது ஒரு லாரி உட்பட சில வாகனங்கள் அதற்குள் சிக்கின. பணியில் இருந்த பலர் அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டனர். அதிகம் மண் சரிந்து இருப்பதால் மண் சரிவுக்குள் யாராவது சிக்கி இருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். தினக் கூலி ஊழியர்கள் இதில் பணி செய்வதால் முறையான பதிவேடுகள் கிடையாது. எத்தனை பேர் ஒரு நாளைக்கு வேலை செய்வார்கள் என்ற கணக்கும் கிடையாது. எனவே மண்ணை அகற்றி உள்ளே யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்பதை பார்க்க வேண்டும் என்றனர்.

மீட்பு பணிகள் தொய்வு

கல்குவாரிகளில் இருந்து சரிந்து விழும் மண்ணை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கி
ருந்த மண் மேலும் சரியத் தொடங்கியதைத் தொடர்ந்து அவசர அவசரமாக கல்குவாரி பள்ளத்தில் இருந்து அனைவரும் வெளியேறி
னர். இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, ஐ.ஜி.சைலேந்திர பாபு, டிஐஜி சாமுண்டீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். மீட்பு பணிகளையும் தீவிரப்படுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறும் போது, “அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது மண் சரிவுக்குள் யாரும் சிக்கவில்லை, பணியில் இருந்த மற்ற அனைவரும் வெளியேறிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சரிந்துள்ள மண் மொத்தமாக அப்புறப்படுத்தப்படும். வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது அப்போதுதான் தெரியவரும்” என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநிலச் செயலர் அருங்குன்றம் தேவராஜன் கூறும்போது, “கல்குவாரி
கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன. இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. விதிகளை மீறி செயல்படும் கல்
குவாரிகளை மூட வேண்டும். சரிந்துள்ள மண்ணை அப்புறப்படுத்தி உள்ளே யாரேனும் சிக்கி இருந்தால் அவர்களை மீட்க வேண்டும்” என்றார்.

அந்த இடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தினர், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் உள்ளிட்ட அமைப்பினர் குவிந்து கல்குவாரிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x