Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM
புதிய ரக மக்காச்சோள விதைகளை பயிரிட்ட பின்னரும் கடும் நஷ்டத்தை சந்தித்திருப்பதாக, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சாளரப்பட்டி விவசாயி சிவசாமி மற்றும் ஆறுச்சாமி ஆகியோர் கூறியதாவது:
எங்கள் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கடந்த அக்டோபர் மாதம் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தோம். உடுமலை நகரில் உள்ள இரண்டுவிதை விற்பனைக் கடைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மக்காச்சோள விதை 5 கிலோ ரூ.1550-க்கு வாங்கி பயிரிட்டிந்தோம். ஜனவரி மாதம் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், போதிய விளைச்சல் இல்லாததால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளோம்.
இதுதொடர்பாக வேளாண்மைத் துறை இணை மற்றும் துணை இயக்குநர்களிடம் புகார் அளித்துள்ளோம். வழக்கமான மக்காச்சோளத்தின் முளைப்புத்திறனில் 25 சதவீதம் கூடஇதில் இல்லை. மற்ற மக்காச்சோளங்களைக் காட்டிலும் 50 சதவீதம் வளர்ச்சி குறைந்து காணப்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறோம். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை முளைப்பு இன்றி நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.
தேவையான நுண்ணூட்டம், தண்ணீர் அனைத்தும் சரியான அளவில் கொடுத்தோம். 5 முதல் 6 கருதுகள் இருந்தும், உள்ளே முழுமையாக மக்கோச்சோளம் இல்லை. சோள சோகையானது மழைநீர் எளிதில் செல்லும்படியான வகையில் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், சோகையினுள் மழைநீர் சென்று மீதியிருந்த சோளங்களும் முளைத்துவிட்டன.
ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வர வேண்டும். ஆனால், 4 மூட்டைகள்தான் வந்துள்ளன. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவழித்தோம். தற்போது ரூ.8000-ம்தான் வந்துள்ளது. தண்ணீர், உரம்உள்ளிட்ட அனைத்தும் சரியாக செய்தும் விளைச்சல் இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.
விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாச்சலம் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும் போது, "மடத்துக்குளம் வட்டத்தில் விவசாயிகளின் புகார் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் பெய்த மழையால், அதிக ஈரப்பதத்தில் முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டிருக்கும்.
குறிப்பிட்ட புதிய ரகமக்காச்சோள விதைகள் குறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை விஞ்ஞானிகளுடன் சென்று ஆய்வு செய்தோம்.
பருவநிலை மாற்றத்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT