Published : 04 Feb 2021 10:26 PM
Last Updated : 04 Feb 2021 10:26 PM
தமிழகத்தில் மினி கிளினிக்குகளுக்கு புதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 2 வாரங்களில் நேரடியாக, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக, மாவட்ட சுகாதார மையம் மூலமாக நியமிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பேரவையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தொடர்ந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தன.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், உதித்த சீர்மிகு திட்டம்தான் அம்மா மினி கிளினிக் திட்டம்.
எங்கெல்லாம் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டுமென்று, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் விரும்புகின்றார்களோ, அங்கெல்லாம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், எந்த முதல்வரும் செய்யாத, ஒரு வரலாற்றுச் சாதனையாக, 2000 மினி கிளினிக்கை, ஒரே நேரத்தில், கொடுத்துள்ளோம்.
அதற்கு 2000 புதிய மருத்துவர்கள், 2000 புதிய செவிலியர்கள், 2000 பணியாளர்கள், எல்லாவற்றிற்கும் இன்றைக்கு
ஒப்புதலைப் பெற்றிருக்கிறோம்.
இந்தப் பணியிடங்களை இந்த 2 வாரங்களில் நேரடியாக, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக, மாவட்ட சுகாதார மையம் மூலமாக நியமிக்க இருக்கின்றோம்.
கரோனா தடுப்பூசியை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக முதலில் நானும், சுகாதாரத் துறை செயலாளரும் பெற்றுக் கொண்டோம்.
இப்போது முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஒருவேளை, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் உட்பட அனைவரும் தடுப்பூசியைப் பெற்று மக்களுக்கு ஒரு நம்பிக்கையினை ஊட்டியிருந்திருக்கலாம். அமைச்சர்களும் அதற்குத் தயாராகவே இருக்கின்றனர்.
நிச்சயமாக ஓரிரு வாரங்களில் அதற்குண்டான சாதகமான பதில் வரும். பின்னர், சேலத்தில் முதற்கண் முதல்வருக்கும் பிறகு சட்டமன்ற உறுப்பினர் செம்மலை அவர்களுக்கும், தடுப்பூசி வழங்கப்படுமென்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT