Published : 04 Feb 2021 07:18 PM
Last Updated : 04 Feb 2021 07:18 PM

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் இரு பாடப் பிரிவுகளை ரத்து செய்தது முறையற்றது: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் இருபாடப் பிரிவுகளை ரத்து செய்தது முறையற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

''அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலாஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலாஜி ஆகிய இரு பாடப் பிரிவுகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதால் சம்பந்தப்பட்ட வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களது கல்வி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படியா அல்லது தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களைச் சேர்ப்பதா என்ற குழப்பத்தின் காரணமாக மேற்கண்ட இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது இது முறையற்றது, வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

இந்தப் படிப்பிற்குச் சேர்க்கை நடத்த வெளியிடப்பட்ட அறிக்கை விளம்பரம் உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களை எந்தப் பல்கலைக்கழகம் சேர்த்துக் கொள்கிறதோ, அந்தப் பல்கலைக்கழகம் தனது விதிமுறைகளின்படி சேர்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகம் என்பதால் தமிழக அரசு பின்பற்றும் 69 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்துவதே முறையானதாகும். இப்பிரிவுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது என்று காரணம் காட்டி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க வேண்டுமென மத்திய அரசு வற்புறுத்துவது ஏற்க முடியாத ஒன்றாகும்.

எனவே, மேற்கண்ட இரு பிரிவுகளுக்கும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி 69% இட ஒதுக்கீட்டினை வழங்கி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு தொடர்ந்து அம்மாணவர்கள் கல்வி கற்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு மாணவர்களின் கல்வி பாதிக்காமல் தொடர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x