Published : 04 Feb 2021 06:53 PM
Last Updated : 04 Feb 2021 06:53 PM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள், அதிகாரிகள் குழுவினர் பிப்.10-ம் தேதி சென்னை வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையிலான தேர்தல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை, இந்திய தேர்தல் ஆணையமும் கண்காணித்து வருகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும், தேர்தல் ஆணையப் பொதுச்செயலர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சென்னை வந்தனர். அவர்கள் முதலில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், கருத்துகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசுத்துறை அதிகாரிகள், வருமானவரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளைச் சந்தித்தனர். அப்போது, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வகையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மாற்றுத்தினாளி வாக்காளர்களுக்கான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வர உள்ளனர். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் சுஷில் சந்ரா, ராஜீவ்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு வரும் பிப்.10-ம் தேதி சென்னை வருகின்றனர். இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கும் அவர்கள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் மாவட்டம், தொகுதி வாரியாக தேர்தல் ஏற்பாடுகளைக் கேட்டறிகின்றனர். அதன்பின், தமிழக தலைமைச் செயலர், பல்வேறு துறைகளின் செயலர்கள், வருமான வரி, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, கலால்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
இதையடுத்து, புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கும் தேர்தல் ஆணையர்கள் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT