Published : 04 Feb 2021 06:49 PM
Last Updated : 04 Feb 2021 06:49 PM
காரைக்கால் அருகே நிரவி பகுதியில் அமைந்துள்ள கார்கோடகபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு இன்று சிறப்பான வகையில் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட காக்கமொழி கிராமத்தில் பழமைவாய்ந்த கற்பகாம்பாள் சமேத கார்கோடகபுரீஸ்வரர் கோயில் உள்ளது. ராகு-கேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.60 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
இதையடுத்து, குடமுழுக்கு செய்வதற்கான முதல் கால யாக பூஜை கடந்த 2-ம் தேதி மாலை தொடங்கியது. இன்று (பிப். 04) காலையுடன் நான்கு கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு அனைத்து விமான கலசங்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தனர்.
குடமுழுக்கு விழா ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் வாரிய நிர்வாகிகள், திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
திருநள்ளாறு அருகே சேத்துார் பகுதியில் உள்ள பாலவிநாயகர், அய்யனார் ஆகிய கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிலும் முதல்வர், அமைச்சர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT