Last Updated : 04 Feb, 2021 06:47 PM

 

Published : 04 Feb 2021 06:47 PM
Last Updated : 04 Feb 2021 06:47 PM

காரைக்கால் மேற்கு புறவழிச் சாலை திறப்பு விழா: அறிவிக்கப்பட்டபடி கருணாநிதி பெயர் சூட்டப்படாததால் சர்ச்சை

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியிடம் கேள்வி எழுப்பிய திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம்.

 காரைக்கால்

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு புறவழிச் சாலை திறப்பு விழாவில், ஏற்கெனவே புதுச்சேரி முதல்வரால் அறிவிக்கப்பட்டபடி கருணாநிதியின் பெயர் சூட்டப்படாதது குறித்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரைக்கால் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கீழகாசாகுடி பகுதியில் தொடங்கி தலத்தெரு, கோவில்பத்து, புதுத்துறை, மேல ஓடுதுறை அக்கரைவட்டம், நிரவி வழியாக திருமலைராயன் பட்டினம் பாலம் வரை 8.30 கி.மீ. நீளத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாகக் கீழகாசாகுடி பகுதியிலிருந்து திருநள்ளாறு சாலையை இணைக்கும் வகையில், சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு 45 மீட்டர் அகலத்தில், நான்கு வழிப் பாதையாக, ஹட்கோ நிதியுதவியுடன் ரூ.21.20 கோடி மதிப்பில் புதிதாகச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை திறப்பு விழா இன்று (பிப்.4) காலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கலந்துகொண்டு சாலையை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச் சாலைக்கு, டாக்டர் கலைஞர் புறவழிச் சாலை எனப் பெயர் சூட்டப்படும் எனத் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்த சமயத்தில், அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்தார்.

ஆனால், இன்று புறவழிச் சாலை திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகளிலும், அழைப்பிதழிலும் பெயர் எதுவும் இல்லாமல் மேற்கு புறவழிச் சாலை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நிகழ்விடத்துக்கு வந்த திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையிலான திமுகவினர் இதுகுறித்து முதல்வரிடம் கடுமையாகக் கேள்வி எழுப்பினர்.

அப்போது முதல்வர், ''இங்கு வந்ததும் உடனே இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினேன். அவசர அவசரமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டதால் இவ்வாறு நடந்துவிட்டது. அந்த போர்டுகளை அகற்றச் சொல்லியுள்ளேன். டாக்டர் கலைஞர் பெயருடன் கல்வெட்டு அமைக்கப்படும்'' என உறுதியளித்தார்.

மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் நான் காரைக்கால் வரும்போது, இப்பகுதியில் போர்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என மாவட்டத் துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷிடம் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தினார். இந்நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x