Published : 04 Feb 2021 05:42 PM
Last Updated : 04 Feb 2021 05:42 PM
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே மறவன்பட்டியைச் சேர்ந்த முத்துவீரன், இந்திராணி தம்பதிக்கு கடந்த டிசம்பர் 19-ம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் குறை மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் எடை 875 கிராம் இருந்ததால், பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஒருவார சிகிச்சைக்குப் பிறகு செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழாய் மூலம் பால் கொடுக்கப்பட்டது. குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்ததையடுத்து இன்று (பிப். 04) ஆரோக்கியமான நிலையில் குழந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறைந்த எடையுடன், குறைமாதத்தில் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரைப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி கூறியதாது:
''குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
பின்னர், நுரையீரல் வளர்ச்சிக்காக சர்பேக்டண்ட் மருந்தும் நுரையீரலுக்குச் செலுத்தப்பட்டது. ஒரு வார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் சுவாசிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு, குழந்தைக்குக் குழாய் மூலம் சிறிதளவு பால் கொடுக்கப்பட்டது. குழந்தைக்குக் கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டன.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் முழுவதும் சரியான பிறகு பாலாடை மூலம் தாய்ப்பால் வழங்கப்பட்டு பிறகு நேரடியாகத் தாய்ப்பால் வழங்கப்பட்டது. குழந்தையின் எடை அதிகரிக்க கங்காரு தாய் கவனிப்பு முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
பின்னர், 48 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் எடை ஒரு கிலோவுக்கும் மேல் அதிகரித்தது. மேலும், குழந்தைகளுக்கான கண் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை மற்றும் தலைக்கான ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டதில் குறைபாடுகள் இல்லை என்பதால் குழந்தை நல்ல முறையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறைவான எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அர்ப்பணிப்புடன்கூடிய செயலானது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது".
இவ்வாறு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT