Published : 04 Feb 2021 05:00 PM
Last Updated : 04 Feb 2021 05:00 PM
புதுச்சேரி திமுகவினர் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தேர்தல் பணியைச் செய்ய வேண்டும் என்றும், அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவுக்கு வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் என்றும் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து விரிசல் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி நடத்தும் அனைத்துக் கூட்டங்களையும் திமுக புறக்கணித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி திமுக தெற்கு மாநில அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் இன்று (பிப். 04) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ பேசியதாவது:
"இந்திய அளவில் புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம். ஆனால், இங்கு திமுக நடத்திய கூட்டம், தேசிய அளவில் காங்கிரஸ், திமுக கூட்டணி உடைந்துவிடுமோ என்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டம் நடைபெற்ற தினத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமோ என்றும் பேசப்பட்டது. இது திமுக தலைவர் உருவாக்கிய கூட்டணி. எனவே இந்த ஆட்சிக்காலம் முடியும் வரை திமுக புதுச்சேரி அரசை ஆதரிக்கும்.
அதேசமயம், புதுச்சேரி திமுகவினரின் கோரிக்கை மற்றும் வேண்டுகோளை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றுள்ளார். எனவே, புதுச்சேரி திமுகவினர் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தேர்தல் பணியைச் செய்ய வேண்டும். திமுகவுக்கு அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும் மக்கள் திமுகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிப்பார்கள்".
இவ்வாறு சிவா எம்எல்ஏ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT