Published : 04 Feb 2021 04:08 PM
Last Updated : 04 Feb 2021 04:08 PM
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் முருகனை தமிழ் கடவுள் என அறிவிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வீற்றிருக்கும் முருகன் தமிழ்க் கடவுள். இதனை உறுதிப்படுத்த பல்வேறு தமிழ் இலக்கிய சான்றுகள் உள்ளன. அதன் அடிப்படையில் முருகன் தமிழ்க் கடவுளா? இல்லையா? எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டேன். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், முருகன் தமிழ்க் கடவுள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தாண்டு முதல் தைப்பூசத்துக்கு பொது விடுமுறை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முருகனை தமிழ்க் கடவுள் என அறிவித்து, அதை அரசிதழில் வெளியிடக்கோரி அரசுக்கு ஜன. 7-ல் மனு அனுப்பினேன். இதுவரை என் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழ் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் முருகன் தமிழ் கடவுள் என அறிவித்து அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், முருகன் என்ற பெயருக்கு அழகு, திறமை, அறிவு, இளமை என பல பொருட்கள் உள்ளன. முருகனை தமிழ்க்கடவுள் என அழைக்கின்றனர். முருகனை தமிழ்க் கடவுள் என அறிவித்து, அதை எப்படி அரசிதழில் வெளியிட முடியும்.
இந்து மதத்தில் பல கடவுள்கள் உள்ளனர். ஒவ்வொரு இலக்கியத்திலும் ஒவ்வொரு கடவுள் பற்றி பாடப்பட்டுள்ளது. இதனால் இலக்கியத்தின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது.
தமிழகம் மதசார்பற்ற மாநிலம். பல மொழி, மதம், நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்கின்றனர். மனுதாரரின் கோரிக்கைபடி ஒரு கடவுளை தமிழ் கடவுள் என அறிவிப்பது மதசார்பற்ற தன்மையை பாதிக்கும். இதனால் அவ்வாறு உத்தரவிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT