Published : 04 Feb 2021 03:44 PM
Last Updated : 04 Feb 2021 03:44 PM
தமிழ்நாடு என்பதற்கான ஆங்கில வார்த்தை சரியான உச்சரிப்பு வரும்படி மாற்றக்கோரிய மனு மீது தமிழக அரசு 8 வாரத்தில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ் பழமையான தனிச் சிறப்பு கொண்ட மொழி. தமிழ் மொழியின் ஆகச் சிறந்த அடையாளம் சிறப்பு ழகரம். தமிழ்நாடு என்பதை தற்போது குறிக்க பயன்படுத்தும் tamilnadu என்ற ஆங்கில சொல் உச்சரிக்கும் போது டமிழ்நாடு என வருகிறது. அதை ஆங்கிலத்தில் THAMIZHL NAADU எனக் குறிப்பிட்டால் தமிழ்நாடு என்ற உச்சரிப்பு சரியாக இருக்கும்.
தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, பரிபாடல், மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்பட இலக்கியங்களில் சிறப்பு ழகரத்துடன் தமிழ்நாடு என்ற வார்த்தை பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு என்பதற்கான ஆங்கில வார்த்தையான tamilnadu -யை THAMIZHL NAADU என மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வட மாநிலத்தவர்களுக்கும், ஆங்கிலேயேர்களுக்கும் சிறப்பு ழகரம் வராது என்றனர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், தமிழ் மொழியின் பெருமையே அந்த சிறப்பு ழகரம் தான். பிற மாநிலத்தவர்களுக்காக அந்த சிறப்பை ஏன் நாம் இழக்க வேண்டும். தமிழக அரசின் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற விளம்பரத்தில் THAMIZHL NAADU என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை சரியான உச்சரிப்பு வரும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தமிழின் சிறப்பை கருத்தில் கொண்டு தலைமைச் செயலர், உள்துறை செயலர் ஆகியோர் மனுதாரரின் மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT