Published : 04 Feb 2021 03:35 PM
Last Updated : 04 Feb 2021 03:35 PM

பையனூரில் ஜெயலலிதா படப்பிடிப்புத் தளம்; 3-ம் கட்ட நிதியாக ரூ.3.5 கோடி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

பையனூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளத்தை அமைக்க 3-ம் கட்ட நிதியாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திடம் வழங்கினார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கையினை ஏற்ற முதல்வர், ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் ஜெயலலிதா படப்பிடிப்புத் தளம் அமைப்பதற்கு முதல் கட்டமாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் 16.9.2019 அன்று 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், 1.6.2020 அன்று இரண்டாம் கட்டமாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதல்வரால் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத் தற்போது மூன்றாம் கட்டமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் தமிழ்நாடு முதல்வர், இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x