Published : 04 Feb 2021 10:44 AM
Last Updated : 04 Feb 2021 10:44 AM
திருச்சி மன்னார்புரம் அருகே சாலை மேம்பால திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று (பிப். 3) நாடாளுமன்றத்தில் விதி 377 இன் கீழ் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-குக்கு மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக, சு. திருநாவுக்கரசர் விடுத்துள்ள கோரிக்கை:
"மன்னார்புரம் அருகே திருச்சி நான்கு லேன் சாலை மேம்பாலத் திட்டம் (Road Over Bridges) 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் நுழையாமல் திருப்பிவிடுவதற்கு சாலை மேம்பாலத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. சாலை மேம்பாலம் திட்டத்தின் முதல் கட்டம் 2018 ஆம் ஆண்டில் நிறைவடைந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
இருப்பினும், மத்திய பாதுகாப்புத் துறையின் 0.66 ஏக்கர் நிலம் மாற்றம் செய்து தருவதில் தாமதம் ஏற்பட்டதால், மிகமுக்கியமான சென்னை செல்லும் சாலையின் ஒரு இணைப்பு பகுதி முழுமை அடையாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக சாலை மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறையின் நிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் நிலம் மாற்று நிலமாக தமிழக அரசு, கண்டறிந்துள்ளது. அந்நிலத்தை மத்திய பாதுகாப்புத் துறைக்கு மாற்றுவதற்கு தடையின்மை சான்றிதழ் தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டம் திருச்சி மாநகரின் நீண்டகாலம் நிலுவையில் உள்ள உள்கட்டமைப்புத் திட்டமாகும்.
எனவே, இக்குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவைப்படும் மத்திய பாதுகாப்பு துறையின் நிலத்தை விரைவாக மாற்றம் செய்து தருவதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறும் நிலுவையில் உள்ள மேம்பால திட்டத்தை மீண்டும் தொடங்கி முடிக்க அனுமதி வழங்கும்படியும் பாதுகாப்பு துறை அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT