Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக ரூ.331 கோடியில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.
முதல் கட்டமாக கோதாவரி -காவிரி இணைப்பு திட்டத்தில் ரூ.60 ஆயிரம் கோடியில் 1,252 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்ட திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கையும் தயாராகிவிட்டது. அதுகுறித்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 83 டிஎம்சி தண்ணீர்கிடைக்கும்.
இதனிடையே, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டஆரம்பகட்ட பணிகள் ரூ.331 கோடியில் நடைபெற்று வருகின்றன என்றுதமிழக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம், 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.6,941 கோடி. மத்திய அரசு நிதி, நபார்டு நிதியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 6 ஆயிரம் கனஅடி கொள்ளளவு கொண்ட கால்வாய் 262 கி.மீ. தொலைவுக்கு வெட்டப்படும். இந்த கால்வாய் காவிரி, கோரையாறு, அக்னியாறு, தெற்குவெள்ளாறு, விருசுழியாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, சருகுனியாறு, உப்பாறு, வைகை, கிருதம்மாள் நதி, குண்டாறு வரை செல்கிறது.
இத்திட்டப் பணிகள் முழுவதுமாக முடியும்போது மொத்தம் 52,332 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும், குடிநீரும் தட்டுப்பாடின்றி தாராளமாக கிடைக்கும். 3 ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதான திட்டமான கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்போது, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டக் கால்வாயில் ஆண்டுக்கு 80 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அதுவரை காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது காவிரி - குண்டாறு இணைப்பு திட்டக் கால்வாயில் வெள்ளநீர் திருப்பிவிடப்படும்.
இத்திட்டத்தின்படி, முதல்கட்ட பணிகளாக திருச்சி முக்கொம்பு அருகே கட்டளை கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT