Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM
ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க ரூ.36.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங் களவையில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மதுரை மற்றும் திருச்சி மார்க்கமாக பேருந்து மற்றும் ரயில் மூலம் வருகின்றனர். ராமேசுவரத்துக்கு விமானம் மூலம் யாத்திரை, சுற்றுலா வருபவர்கள் விமானத்தில் மதுரை வரை வந்து, பின்னர் 170 கி.மீ தொலைவை 4 மணி நேரம் கார் அல்லது இதர வாகனங்களில் பயணம் செய்து வரவேண்டியுள்ளது.
இதனால் பெருமளவில் நேர விரையமும் ஆகிறது. இதனால் ராமநாதபுரம் பகுதியில் விமான நிலையம்அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது. இந்நிலையில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கேட்ட கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று (பிப்ரவரி 3) எழுத்துப்பூர்வமாக அளித்த விவரம் வருமாறு,
உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய நான்கு இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ராமநா தபுரம் விமான நிலையத்துக்கு ரூ.36.72 கோடியும், தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50.59 கோடியும், வேலூர் விமான நிலையத்துக்கு ரூ.44 கோடியும், நெய்வேலி விமான நிலையத்திற்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
உச்சிப்புளி விமானதளம்
ராமேசுவரம் அருகே உள்ள உச்சிப்புளி கடற்படை விமான தளத்தினை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை விமான நிலையமாக மாற்ற பரீசிலிக்கப்பட்டு வருவதாகத்தெரிகிறது. உச்சிப்புளியில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட விமானதளத்தை, இந்திய கடற்படை தன் வசம் எடுத்து 1982-ம் ஆண்டு கடற்படை விமானத்தளம் அமைத்தது. தற்போது ஐ.என்.எஸ் பருந்து என்று அழைக்கப்படும் இந்த கடற்படை விமான தளம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா, பாக் நீரிணைப்பு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சுமார் 3000 அடி நீளமுடைய இந்த விமானத்தளத்திலிருந்து ஐலண்டர், டோர்னியர், சேட்டாக், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து விமானதளம் ராமேசுவரத் திலிருந்து 35 கி.மீ தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT