Published : 18 Nov 2015 04:50 PM
Last Updated : 18 Nov 2015 04:50 PM
பருவமழை காரணமாக திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் நிரம்பி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. அமராவதி அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடி. கேரளத்தில் உள்ள பாம்பாறுதான் இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரம். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சின்னாறு மற்றும் சிறு ஓடைகள் மூலமும் நீர் வரத்து உள்ளது.
இந்த அணையின் மூலம் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும், ஏராளமான கிராமங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகின்றன. கடந்த 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெய்த கன மழையால் அணைக்கு விநாடிக்கு 1,316 கன அடி வரை நீர் வரத்து இருந்தது. அதன்பிறகு போதிய மழை இல்லாததால் 400, 300 கன அடி என படிப்படியாக குறைந்தது. 4-ம் தேதி 57.68 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது. 16-ம் தேதி பெய்த மழையால் அணைக்கு விநாடிக்கு 1,959 கன அடி நீர் வரத்து கிடைத்தது. அதனையடுத்து அணையின் நீர் மட்டம் 71.39 அடியாக உள்ளது.
(நீர் நிரம்பி காணப்படும் திருமூர்த்தி அணை |படம்:எம்.நாகராஜன்)
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘ஏற்கெனவே பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணை மெதுவாக நிரம்பி வருகிறது. அடுத்த கட்டமாக பாசனத்துக்கு அரசின் அறிவிப்பு கிடைத்த பிறகு தண்ணீர் திறக்கப்படும்’ என்றார்.
பிஏபி தொகுப்பு அணைகளின் நீர்த் தேக்கமான திருமூர்த்தி அணையின் மொத்த நீர் மட்டம் 60 அடி. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53 அடியாகவும், காண்டூர் கால்வாய் மூலம் தற்போது அணைக்கு விநாடிக்கு 400 கன அடி நீர் வரத்தும் உள்ளது.
கடந்த அக்டோபர் 12-ம் தேதி 4, 3 வது மண்டல பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த 2-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 16-ம் தேதி முதல் காங்கயம், வெள்ளகோயில் பகுதி பாசனத்துக்காக அணையில் இருந்து விநாடிக்கு 587 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அணையின் உதவி செயற்பொறியாளர் செல்லமுத்து கூறும்போது,
‘தொகுப்பணைகளின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் காண்டூர் கால்வாயில் தற்போது 400 கன அடி நீர் வரத்து உள்ளது. இருப்பினும் பாசனத் தேவைக்காக பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது’ என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி உடுக்கம்பாளையம் கே.பரமசிவம் கூறும்போது,
‘பருவமழை ஒரு பகுதியில் மட்டுமே பரவலாக பெய்துள்ளது. உடுமலையின் மேற்குப் பகுதியில் லேசான மழையே பெய்துள்ளது. இருப்பினும் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவது பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT