Published : 10 Nov 2015 01:54 PM
Last Updated : 10 Nov 2015 01:54 PM
திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 16-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. காவல் தெய்வமாக உள்ள துர்க் கையம்மன் உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் பிடாரியம்மன் உற்சவம் 14-ம் தேதியும், மறுநாள் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் நடைபெறும்.
இதையடுத்து, ஐப்பசி மாதம் 30-ம் தேதி (நவ.16-ம் தேதி) காலை 6.15 மணிக்கு மேல் 7.25 மணிக் குள் விருச்சிக லக்கினத்தில் கொடி யேற்றம் நடைபெறும். அதற்காக தங்க கொடிமரம் அலங்கரிக் கப்பட்டு சிறப்புப் பூஜை செய்யப் படவுள்ளது. பின்னர், பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெறும்.
22-ம் தேதி மகா தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 21-ம் தேதி இரவு நடைபெறும். அதன்பிறகு 7-ம் நாள் (22-ம் தேதி) காலை மகா தேரோட்டம் தொடங்குகிறது. காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் விநாயகர் தேரோட்டம் தொடங்கும். பின்னர் முருகர் தேரோட்டத்தைத் தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் தேரோட்டம் நடைபெறும். அதன் பிறகு பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரோட்டம் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் அடுத்தடுத்து நடைபெறும்.
காலை தொடங்கும் பஞ்ச ரதங்களின் மாட வீதியுலா பவனி, நள்ளிரவு வரை தொடரும். இதையடுத்து 8-ம் நாள் விழாவில் பிச்சாண்டவர் உற்சவம், 9-ம் நாள் விழாவில் கைலாச மற்றும் காமதேணு வாகனத்தில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடை பெறும்.
25-ம் தேதி மகா தீபம்
இதைத்தொடர்ந்து விழாவின் (9-ம் நாள் விழா) முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் வரும் 25-ம் தேதி மாலை ஏற்றப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை கொடி மரம் எதிரே உள்ள தீப தரிசன மண்டபத்தில் அமர்ந்து இருக்கும் பஞ்சமூர்த்திகளுக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்த தும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபமாக அண்ணாமலையார் காட்சி கொடுப்பதால், கோயில் மூடப்பட்டுவிடும்.
அதன்பிறகு, 10-ம் நாள் விழா வில் இருந்து தொடர்ந்து 3 நாட் களுக்கு 12-ம் நாள் விழா வரை சந்திரசேகரர், பராசக்தி அம்மன், முருகன் உற்சவர்களின் தெப்பல் உற்சவம், அய்யங்குளத்தில் நடை பெறும். மேலும், 10-ம் நாள் விழாவில் (26-ம் தேதி) உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறும். பின்னர், 13-ம் நாள் விழாவில் (29-ம் தேதி) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT