Published : 03 Feb 2021 08:45 PM
Last Updated : 03 Feb 2021 08:45 PM
விவசாயிகளின் உரிமைகளை பறிப்பது தேசநலனுக்கு விரோதமானது என நாட்டைக் காப்போம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.ராசன் கூறியதாவது:
"வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களாக போராடி வருகின்றனர். கடும் குளிரில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
வன்முறை மூலம் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் கண்டிக்கதக்கது. மத்திய அரசு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டம் நிறைவேற்றி விவசாயிகள் உயிரைப் பறிப்பது அடக்குமுறையின் உச்சக்கட்டம்.
டெல்லி டிராக்டர் பேரணி முடிந்த பின் சிங்கு எல்லையிலுள்ள விவசாயிகளை விரட்ட உள்ளுர் மக்கள் என்றப் பெயரில் குண்டர்களை அனுப்பி, விவசாயிகளின் முகாமின் மீது கற்களை வீசியும், தீவைக்க முயன்றும் வன்முறை நடத்தப்பட்டுள்ளது.
ஆசை வார்த்தைகளைக் காட்டியும், அதிகாரத்தை செலுத்தியும் போராட்டத்தை சீர்குலைக்க முடியாது என்பதற்கு விவசாயிகளின் போராட்டம் ஒரு முன் உதாரணம்.
கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக சட்டம் போட்டுவிட்டு விவசாயிகளைப் பணிய வைக்கலாம் என நினைப்பதை உடனடியாக மாற்றிக் கொண்டு, விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளின் உரிமையையும் அரசு மதிக்க வேண்டும்"
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT