Published : 03 Feb 2021 08:23 PM
Last Updated : 03 Feb 2021 08:23 PM
10 மாத இடைவெளிக்கு பிறகு பிப்ரவரி 8-ம் தேதி முதல் வழக்குகளின் நேரடியாக விசாரிக்கத் தொடங்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்தும் முடக்கப்பட்டன. பின்னர் கடந்த 8 மாதங்களாக படிப்படியாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக்கிளை ஆகியவை முழுமையாக செயல்படவில்லை.
இந்நிலையில் கரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளாதால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆகியவற்றில், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிப்ரவரி 8-ம் தேதி முதல் வழக்குகளின் விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல வழக்கறிஞர்கள் விரும்பினால் கானொலிக் காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடி வழக்கு விசாரணையைப் பொறுத்தவரை இறுதி விசாரணை வழக்குகள் மட்டுமே காலை மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும் என்றும், மற்ற வழக்குகள் கானொலி மூலமாக மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை பிரிவுகளில் ஒரு நேரத்தில் ஐந்து வழக்கறிஞர்கள் அல்லது குமாஸ்தாக்கள் அல்லது மனுதாரர்கள் ஆகியோரை அனுமதிப்பது எனவும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறைகளை பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு 5 வழக்குகள் மட்டுமே விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு இரு வழக்கறிஞர் வீதம் அறையின் பரப்பளவைப் பொறுத்து 6 முதல் 10 வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வழக்கறிஞர்கள் பதிவுத்துறை ஒதுக்கியுள்ள இடத்தில் காத்திருக்க வேண்டுமெனவும், வழக்கு முடிந்தபின் வராண்டாவில் நிற்காமல் வெளியேறிவிட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அறைகளை பொறுத்தவரை சுத்தப்படுத்தவும், கிருமி நாசினி தெளிக்கவும் அறைகள் திறக்கப்பட்டு உடனடியாக மூடப்படும் எனவும், அறைகளை திறப்பது தொடர்பாக பிப்ரவரி இறுதியில் முடிவெடுக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உணவகங்களைப் பொறுத்தவரை அரசு வகுத்துள்ள விதிகளின்படி திறந்துகொள்ள அனுமதி அளிப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT