Published : 03 Feb 2021 08:14 PM
Last Updated : 03 Feb 2021 08:14 PM
தமிழக அரசு, விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை கணக்கில் கொண்டு சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
“சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று விவசாயிகள் தொடர்ந்துபோராடி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு நிலங்களை கொடுக்க விரும்பவில்லை என்பதை அரசுக்கு பலவிதங்களில் விவசாயிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவதைப் பற்றிக் கவலைப்படாமல் விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக சாலை அமைத்தே தீருவோம் என்று பிடிவாதமாக இருந்து வருகிறது.
அதனை உறுதி செய்யும் வகையில் மத்திய நிதியமைச்சர் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான பணி இந்த ஆண்டே துவங்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனவளம், இயற்கை வளங்களை அழித்தும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களாக விளங்கும் பத்தாயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களை அழித்து எட்டுவழிச்சாலை அமைப்பது ஏற்புடையதல்ல.
ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுபடுத்த வாய்ப்பிருந்தும் அதை மறுத்து விவசாயிகளின் நிலத்தை பறித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மத்திய - மாநில அரசுகள் செயல்படுவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, தமிழக அரசு விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை கணக்கில் கொண்டு சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 11-ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்திட எட்டுவழிச்சாலை எதிர்ப்பியக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT