Published : 03 Feb 2021 06:06 PM
Last Updated : 03 Feb 2021 06:06 PM

எம்ஜிஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்

சென்னை

அதிமுக நிறுவனர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளரும், எம்ஜிஆருக்கு மாற்றாக டூப் போட்டு நடித்தவரும், எம்ஜிஆரின் இறுதிக் காலம் வரை அவருடன் பயணித்தவருமான ராமகிருஷ்ணன் இன்று உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 91.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர் கேபிஆர் என்று அழைக்கப்பட்ட கே.பி.ராமகிருஷ்ணன். இந்நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி அன்று ராமகிருஷ்ணன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். அப்போது அவர் மூளையில் ரத்தக்கட்டி ஏற்பட்டது. உடனடியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் ( ICU) பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வயோதிகம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட இயலாத நிலையில், அவரது மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்ற ஊசி மூலம் மருத்துவர்கள் முயன்றனர். அதுவும் பலனளிக்காத நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே இன்று பிற்பகல் 3.15 மணியளவில் ராமகிருஷ்ணன் காலமானார்.

எம்ஜிஆருடன் வாழ்நாள் முழுவதும் நடிப்பில் டூப்பாகவும், மெய்க்காப்பாளராகவும், அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் அவருக்குத் துணையாகவும் இருந்த ராமகிருஷ்ணனின் மறைவு எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இழப்பாகும். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x