Published : 03 Feb 2021 04:55 PM
Last Updated : 03 Feb 2021 04:55 PM
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தாகக் கூறப்படும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யக்கோரிய மனுவை நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்னம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோகரன்(44), இவர் புதூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு மதுரையில் உள்ள தனது மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக பஸ்சில் அருப்புக்கோட்டை சென்றார்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கியதும் மனோகரன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கரோனா முன்களப்பணியாளர் என்ற அடிப்படையில் ஜன. 21-ல் மனோகரன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அப்போதிலிருந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உயிரிழந்ததாக மனோகரனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி இன்று காணொலியில் ஆஜராகி கூறுகையில், மனோகரன் ஜன. 21-ல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் ஜன. 30-ல் உயிரிழந்தார்.
எனவே மனோகரனின் உடலை சிறப்பு மருத்துவக்குழு அமைத்து பிரேதப் பரிசோதனை செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறியும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இது தொடர்பாக மனோகரன் மனைவி அம்பிகா தாக்கல் செய்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார். அம்பிகாவின் மனுவை நாளை (பிப். 4) விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT