Published : 03 Feb 2021 04:48 PM
Last Updated : 03 Feb 2021 04:48 PM
மக்களுக்கு நல்லது செய்யும் யாருடனும் தேமுதிக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
அண்ணா நினைவு நாளையொட்டி, இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு விஜய பிரபாகரன் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கடந்த தேர்தலில் தேமுதிக தலைமையிலான 3-வது அணி தோல்வி அடைந்த நிலையில், இந்தத் தேர்தலுக்கு 3-வது அணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, "தேர்தலில் வெற்றி- தோல்வி என்பது மக்கள் அளிப்பது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டுமெனில் 3-வது அணி அமைக்க வைக்க வேண்டியது, வெற்றி பெற வைக்க வேண்டியது மக்களின் கடமை. 3-வது அணி அமைக்கும் விவகாரத்தில் தேமுதிக தைரியமாக உள்ளது” என்றார்.
தொண்டர்களையும், செய்தியாளர்களையும் விஜயகாந்த் சந்திக்காமல் உள்ள நிலையில், அவர் தலைமையில் கூட்டணி என்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு, "அமெரிக்காவில் இருந்துகொண்டே தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெற்ற வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. எனவே, இப்போது விஜயகாந்த் வெளியே வர வேண்டியதில்லை. பேச வேண்டியதில்லை. அவர் ஏற்கெனவே நிறைய பேசிவிட்டார். விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. தயாராகி வருகிறார். வர வேண்டிய நேரத்தில் அவர் கட்டாயம் வெளியே வருவார்” என்றார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கிறதா? என்ற கேள்விக்கு, “அதிமுக கூட்டணியில் இந்த வினாடி வரை தேமுதிக நீடிக்கிறது” என்றார்.
சசிகலா வருகையால் அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், அந்தக் கூட்டணியில் தேமுதிக நீடிப்பது சரியாக இருக்குமா? என்ற கேள்விக்கு, “காலம்தான் அதை முடிவு செய்யும்” என்றார்.
சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்ல வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, “மக்களுக்கு நல்லது செய்யும் யாருடனும் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது" என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT