Published : 03 Feb 2021 03:39 PM
Last Updated : 03 Feb 2021 03:39 PM
விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டியில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 500 ஆண்டுகள் பழமையான குதிரைவீரன் மற்றும் போர்வீரனின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூளிப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் தங்கள் ஊரில் பழமையான சிற்பங்கள் இருப்பதாகக் கொடுத்த தகவல்படி, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் தேவதாஸ்பாண்டி, நாகபாண்டி, பழனிமுருகன், மணி ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது, கிராமத்தில் இருந்தவை கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் மற்றும் போர்வீரனின் நடுகற்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறிகையில், "நடுகல் வழிபாடு சங்ககாலம் முதல் தொன்று தொட்டு இருந்து வருகிறது. குறிப்பாக கோவலர்களாகிய மழவர் மணிகட்டிய கடிகை வேலை கையில் வைத்துக் கொண்டு ஆநிரைகளை மீட்டு வரும்போது, வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அவ்வீரனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவார்கள்.
மூளிப்பட்டியில் கண்டறியப்பட்டவை குதிரைப்படை மற்றும் காலாட்படை வீரர்களின் நடுகற்கள் ஆகும். இதில் குதிரை வீரன் நடுகல் 3 அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்டுள்ளது.
இதில் ஒரு வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்று புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலது கையில் ஈட்டி ஏந்தியும் இடது கையில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும் காட்சி தருகிறான். குதிரை முன்னங்காலை தூக்கியவாறு உள்ளது. அவன் கை கால்களில் காப்புமும், தலையில் சிறிய கொண்டையும் உள்ளது.
அதன் அருகில் உள்ள போர்வீரனின் புடைப்புச் சிற்பம் 2 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டுள்ளது. வீரன் இடுப்பில் குறுவாளுடனும், வலது கையில் உயர்த்திய வாளுடனும், நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு வடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரைப்படை மற்றும் காலாட்படை வீரர்களாக இருக்கலாம்.
இந்நடுகற்களை வைரவர் சாமி, பட்டாக் கத்தி வீரன் என இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். சிற்பங்களின் அமைப்பைக் கொண்டு இவை கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT