Published : 03 Feb 2021 02:00 PM
Last Updated : 03 Feb 2021 02:00 PM

அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தை சசிகலா தொடருவார்: டிடிவி தினகரன் 

மதுரை

சென்னை வரும் சசிகலா அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தைத் தொடருவார். சட்டப்படி அவர்தான் பொதுச் செயலாளர். மன்னிக்கப்பட வேண்டியவர்கள் யார், மன்னிப்பு கேட்பவர்கள் யார் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியதாவது:

சசிகலா சென்னைக்கு என்று வருகிறார்?

பிப்ரவரி 7-ம் தேதி காலை 7 மணிக்குப் புறப்பட்டு சென்னை வர உள்ளார். 4 ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பின் சென்னை வர உள்ளார். தொண்டர்கள் அனைவரும் ஓசூர் அருகே தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை வரவேற்கத் தயாராகி வருகிறார்கள். யாருக்கும் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரவேற்க வேண்டும்.

ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்பு காரணமாக மூடுவதாக அறிவித்துள்ளார்களே?

ஜெயலலிதாவுடன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்தவர் சசிகலா. அவர் எதற்காக சிறை சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜன.27-ம் தேதி விடுதலையாகிறார் என அனைவரும் ஆவலோடு காத்திருந்தது அனைவருக்கும் தெரியும். எப்படியும் அவர் வந்துவிடுவார் என்பதற்காக அவசர அவசரமாக பொதுமக்கள் பார்வைக்கு இல்லை என மூடப்பட்டுள்ளது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணம் நின்று விடும் என்பது போன்று உள்ளது அவர்கள் செயல். அத்தனையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் வருகிறார்கள்.

மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் சேர்ப்போம் என கே.பி.முனுசாமி கூறியுள்ளாரே?

யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள்?, யார் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

ஆதரவு போஸ்டர் ஒட்டுபவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்களே?

அதைத்தான் சொன்னேன். சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்துவதாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கெமிக்கல் ரியாக்‌ஷன் உருவாகியுள்ளது. இது தீய சக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அமமுக உருவாக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியை உருவாக்க, அதிமுகவை மீட்டெடுக்கத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

காரில் அதிமுக கொடி கட்டியதை அமைச்சர் கண்டித்துள்ளாரே?

தூங்குபவர்கள் மாதிரி நடிப்பவர்கள் குறித்து என்ன சொல்ல முடியும். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவில் உள்ள பைலாவில் பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் பைலா பற்றித் தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவைக் கூட்டவும், தேர்தலை நடத்தவும், ஒருவருக்குப் பதவி கொடுக்கவும், நீக்கவும் அதிகாரம் படைத்தவர் பொதுச் செயலாளர்.

அவர் சிறைக்குப் போகும்போது என்னைத் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். பொதுச் செயலாளர் செயல்படாதபோது துணைப் பொதுச் செயலாளர்தான் செயல்பட முடியும் என்பது சட்டதிட்ட விதியில் உள்ளது. அதனால் 2017 செப்டம்பரில் இவர்கள் கூட்டிய பொதுக்குழு செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

அதை நீதிமன்றம் முடிவு செய்யும்வரை பொறுத்திருப்போம். இவர்களாகச் சிலர் கூடி பொதுச் செயலாளர் என்கிற பதவியையே நீக்கிவிட்டார்கள். எம்ஜிஆர் கொண்டுவந்த சட்டதிட்டங்களை, ஜெயலலிதா கடைப்பிடித்த சட்டதிட்ட விதிகளை மீறி பொதுச் செயலாளர் பதவியையே ஒழித்துவிட்டு ஜெயலலிதாவை நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தை சசிகலா தொடர்வார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவா?

கொஞ்ச நாள் பொறுத்திருங்கள்.

நீதிமன்றம் போய் வழக்கு போட்டவுடனேயே கட்சி உறுப்பினராக சசிகலா இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

அதிமுக பொதுச் செயலாளரை, அவரது அதிகாரத்தை, அவரை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். அதை மீறிச் சட்டதிட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் சசிகலா நீதிமன்றம் சென்றுள்ளார்.

உங்கள் மீது சசிகலா வருத்தத்தில் உள்ளாரா?

ஜனவரி 27-ம் தேதி கடைசியாக அவரைப் பார்த்தோம். கரோனா ஆரம்பித்தவுடன் பார்க்கவில்லை. எனக்கும் சசிகலாவுக்கும் பேச்சுவார்த்தை சரியில்லை என்றெல்லாம் பரப்பினார்கள். அதெல்லாம் உண்மையில்லை என்பது இப்போது நீங்களே காண்கிறீர்கள்.

சசிகலா சென்னை வந்தால் எங்கெங்கு செல்வார்?

அவர் தலைவர்கள் நினைவிடம் செல்வார் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதற்குள் சில அறிவிப்புகளைப் பார்த்தோம். அதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்வாரா?

அவர்கள் வந்து சிலவற்றைச் சொல்வார் அல்லவா? அதுவரை பொறுத்திருங்கள்.

இவ்வாறு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x