Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிமையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்புக்காக கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு மற்றும்தனியாரில் 166 மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1.20 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. காவல், உள்ளாட்சி மற்றும் ஊடகம் சார்ந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி மையங்களை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் கூடுதலாக 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் மட்டும் 34 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மையங்களில் கரோனா தொற்று தடுப்புபணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் இலவசமாக தடுப்பூசியை போட்டுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது, முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே, அனைத்து தரப்பினருக்கும் சிரமம் ஏற்படாதவகையில், அரசு மற்றும் தனியார்மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT