Published : 06 Nov 2015 03:12 PM
Last Updated : 06 Nov 2015 03:12 PM
பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள், பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடை அணியுங்கள் என தீயணைப்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
வரும் 10-ம் தேதி தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட பொதுமக்கள், குழந்தைகள் குதூகலமாக தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பில்லாமல் பட்டாசுகளை வெடிப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடவும், விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை 12 அறிவுரைகளையும், விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை குறித்து 10 ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பி.சரவணக்குமார் கூறியதாவது:
தீபாவளியை விபத்தில்லாமல் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும். ராக்கெட் போன்ற வாணவெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தபகுதிகளில் வெடிக்க வேண்டும். வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்கக்கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும்பொழுது காலணிகளை அணிய வேண்டும். குழந்தைகளின் சட்டைப் பைகளில் பட்டாசுகளை வைக்கக் கூடாது. குழந்தைகளை பெரியவர்கள் மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும்போது ஒரு வாளி நீரை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு கொளுத்தும் பொழுது இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும். முடிந்தவரை பருத்தி ஆடை அணியலாம். நீண்ட பத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். கையில் வைத்து வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும் பொழுது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அருகில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டாசு வெடித்து முடித்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளில் படிந்திருக்கும் வெடிமருந்துகள் உணவில் கலந்துவிட்டால் அதுவே விஷத்தன்மையாக மாறிவிடும்.
எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம். தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். தீப்புண்ணுக்கு (களிம்பு மருந்தை உபயோகிக்கவும்) இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால் உடனடியாக கண்ணில் சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT