Published : 02 Feb 2021 07:55 PM
Last Updated : 02 Feb 2021 07:55 PM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை லேஅவுட் இன்னும் தயாராகவில்லை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சித் தகவல்

மதுரை

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இன்னும் ‘லேஅவுட்’ தயாராகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, எந்த இடத்தில் அமையப்போகிறது என்பதை முடிவெடுக்க 3 ஆண்டுகள் தாமதம் ஆனது.

அதன்பிறகு ஒரு வழியாக மதுரையில் அமைவதாக அறிவித்து பிரதமர் மோடியும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. கட்டுமானப்பணியும் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டது.

இந்த மருத்துவமனைக்கான கட்டுமானத்திற்காக 85 சதவீதம் நிதியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம், கடனாக வழங்க உள்ளது. ஆனால், இந்த நிறுவனக் குழுவினர் மதுரை தோப்பூரில் எய்மஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து சென்று ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டது. இதுவரை நிதி வழங்குவதற்கான எந்த அறிகுறிகளையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்த மருத்துவமனை குறித்து இரா.பாண்டிராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் கூறுகையில், ‘‘திட்ட மதிப்பீடு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து 12 கேள்விகள் கேட்டிருந்தேன். ஆனால், அதில் பல கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்கவில்லை. அளித்த பதில்களையும் நேரடியாக வழங்காமல் அதுவும் மழுப்பலாகவேக் கூறியுள்ளனர்.

ஜைக்கா நிறுவனம் இந்தத் திட்டத்திற்கு 85 சதவீதம் கடன் நிதி வழங்க உள்ளநிலையில் மீதி 15 சதவீதம் மத்திய அரசா, மாநில அரசா? யார் வழங்கவது? என்று கேட்டிருந்தேன். அதற்கு மீதி 15 சதவீதம் மத்திய அரசு தான் வழங்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.

எப்போது, எவ்வாறு, யார் திட்ட மதிப்பீட்டை அதிகரித்தார்கள் என்ற கேள்விக்கு, ‘ஜைக்கா’வால் தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி திட்டமதிபீடு உயர்த்தப்பட்டது என்று பதில் அளித்தனர்.

ஆனால், திட்டமதிப்பீடு உயர்த்தப்பட்ட நாள் குறித்து தகவல் அளிக்கவில்லை. அதுபோல், எய்ம்ஸ் மருத்துவமனையின் விரிவான திட்ட விவரங்கள் மற்றும் லேஅவுட் ப்ளானை பற்றி கேட்டதற்கு தகவல் இல்லை என்று பதில் அளித்தனர்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x