Last Updated : 02 Feb, 2021 07:18 PM

 

Published : 02 Feb 2021 07:18 PM
Last Updated : 02 Feb 2021 07:18 PM

மதுரையில் கட்டிடம் இடிந்து மூவர் மரணம்; தலா ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி உறவினர்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

மதுரை

மதுரையில் கட்டிடம் இடிந்து மூவர் மரணமடைந்த சம்பவத்தில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை திடீர்நகர்ப் பகுதியிலுள்ள மேலவடம் போக்கித் தெருவில் வாசுதேவன் என்பவருக்குச் சொந்தமான சுமார் 80 ஆண்டு பழமையான கட்டிடம் சீரமைக்கப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களை பலப்படுத்தும் பணியில் நேற்று கட்டிடத் தொழிலாளிகள் ஈடுபட்டனர். எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது.

இச்சம்பவத்தில் திருமங்கலம் கூடக்கோயில் ராமன் (55), விருதுநகர் ஆவியூர் சந்திரன் (55), மதுரை நரிமேடு ஜெயராமன் ஆகியோர் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்தனர். அழகர்சாமி, மாணிக்கவாசகம் காயமடைந்தனர்.

இது தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் வாசுதேவன், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர்கள் பைபாஸ் ரோடு கருப்பையா, கொசுவபட்டி அய்யனார் மீது 4 பிரிவின் கீழ், திடீர்நகர் ஆய்வாளர் கீதாலட்சுமி வழக்குப் பதிவு செய்தார்.

இதற்கிடையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மூவரின் உடல்களை வாங்க மறுத்து, அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் இன்று மதியம் மதுரை அரசு மருத்துவமனை அருகே பனகல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 10 லட்சம், ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வீட்டு உரிமையாளர் வாசுதேவன், ஒப்பந்ததாரர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தினர்.

அண்ணாநகர் உதவி ஆணையர் லில்லிகிரேஸ், திடீர்நகர் ஆய்வாளர் கீதாலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். .

மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பனகல் சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x