Last Updated : 02 Feb, 2021 06:54 PM

 

Published : 02 Feb 2021 06:54 PM
Last Updated : 02 Feb 2021 06:54 PM

இரு வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல்; போகலூர் சுங்க சாவடியை மூடக்கோரி வழக்கு: நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

மதுரை - ராமேஸ்வரம் இரு வழிச்சாலையில் செல்வதற்கு சுங்க கட்டணம் வசூலிப்பது ஏன்? என்பது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை முதல் ராமேஸ்வரம் வரை 76 கிலோ மீட்டர் தொலைவில் நான்கு வழி சாலை பயன்பாட்டில் உள்ளது. பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை 99 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை. பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை சுமார் 18 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை தரமற்றதாக உள்ளது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திடீரென போகலூர் கிராமத்தில் சுங்கச் சாவடி மையம் அமைத்து வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இந்த இடத்தில் சுங்கச் சாவடி அமைப்பது தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது.

இந்த சுங்கச் சாவடி மையத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் விதிவிலக்கு பட்டியலில் வரும் வாகனங்கள் செல்வதற்கு தனிப் பாதை வசதியில்லை. நெடுஞ்சாலை ரோந்து வாகனம், கிரேன், கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே போகலூர் சுங்கச்சாவடி மையத்தை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் கே.நீலமேகம் வாதிடுகையில், மதுரை- ரமேஸ்வரம் சாலை 75 கிலோ மீட்டர் வரை நான்கு வழிச் சாலையாகவும், 76 கிலோ மீட்டரிலிருந்து 99 கிலோ மீட்டர் தூரம் வரை இருவழிச் சாலையாகவும் உள்ளது.

புதிதாக சாலை அமைக்காமல் பழைய சாலையை பழுதுபார்த்துள்ளனர். இரு வழிச்சாலைக்கு நான்கு வழிச்சாலைக்கான கட்டணம் வசூலிக்கின்றனர் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இருவழிச் சாலையில் செல்ல நான்கு வழிச் சாலைக்கான சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x