Last Updated : 02 Feb, 2021 05:48 PM

3  

Published : 02 Feb 2021 05:48 PM
Last Updated : 02 Feb 2021 05:48 PM

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு; முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை பாஜக ஏற்கிறது: சேலத்தில் எல்.முருகன் பேட்டி

தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. அதிமுக தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பாஜக இளைஞரணி மாநாடு ஏற்பாடுகளைப் பார்வையிட சேலம் விமான நிலையம் வந்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியது,

”தேசத்தின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிதிநிலை அறிக்கையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.1.3 லட்சம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்குப் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். தொழில்துறையில் தமிழகம் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை- கொல்லம் இடையே அதிநவீன தேசிய நெடுஞ்சாலை, சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் வரவேற்புக்குரியவை. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லும் வகையில் 35 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீனவர் நலனுக்காக சென்னையில் புதிய மீன்பிடித் துறைமுகம் கடல் பாசியைப் பதப்படுத்தும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பில் விவசாயக் கடன் வழங்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் முன்வைக்கும் விலையை விட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் வாயிலாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் நிதிநிலை அறிக்கையை அவர் வரவேற்கவில்லை. அவர் சொல்வதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழகத்திற்கு இவ்வளவு திட்டங்கள் வந்துள்ளதை வரவேற்க மனம் இல்லை என்பதால் அவர் இவ்வாறு கூறுகிறார். தேர்தலுக்காக தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் முத்ரா திட்டம் , பிரதமர் வீட்டு வசதி திட்டம், பயிர்க் காப்பீடு உள்ளிட்ட எந்த ஒரு மத்திய அரசு திட்டமாக இருந்தாலும் தமிழகத்துக்கே அதிக பலன் கிடைத்துள்ளது.

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தைத் தமிழகத்தின் வளர்ச்சியை, தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கிறார்கள். இதற்காக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நிலையில் தேசத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எட்டுவழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழகத்தில் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் இணைந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக சந்திக்கவுள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணி அப்படியே தொடர்கிறது. எங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. அதிமுக தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே வருடத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தமிழகத்துக்கு அளித்துள்ளார்.

தமிழகத்தின் நலனில் அதிக அக்கறை இருப்பதால்தான் பிரதமர் மோடி மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்குத் தொடர்ந்து அறிவித்து வருகிறார். ராகுல் காந்தி வருகையால் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும். கூட்டணி வாயிலாக சில எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். தற்போது, ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைக் காணாமல் போகச் செய்துவிடும்.

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அந்தக் கூட்டணி விரைவில் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது. சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால் அவர் தமிழகத்துக்கு வந்த பின்னரே இதுகுறித்து தெரியும்".

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x