Published : 13 Nov 2015 04:44 PM
Last Updated : 13 Nov 2015 04:44 PM

கொரியன் கிராஸ் அலங்கார புல்தரைகளுக்கு வரவேற்பு: பெங்களூருவில் இருந்து அதிகளவில் தமிழகம் வருகை

எவ்வளவு செயற்கை அலங்கார பொருட்கள் வந்தாலும், மனிதர்களுக்கு மனநிறைவையும், அமைதியையும் தருவது இயற்கையான புல்வெளிகள்தான். உதகை, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்வது இந்த புல்வெளி தரைகளைத்தான். அதற்காகவே பெற்றோர்கள் குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்வர். குழந்தைகள் குதூகலத்துடன் அந்த புல்தரைகளில் ஓடியாடி விளையாடி மகிழ்வர். பெரியவர்கள் குடும்பத்துடன் நடைபயிற்சி சென்றும், அமர்ந்தும் பொழுது போக்குவர். கடந்த காலத்தில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், பெரிய பண்ணை வீடுகளில் மட்டுமே செயற்கை முறையில் இந்த புல்தரைகளை அமைத்தனர்.

தற்போது அலங்காரத்துக்காகவும், மன அமைதிக்காகவும் இதுபோன்ற புல்தரைகளை பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பண்ணை வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்ட வளாகங்களில் அதிகளவு அமைக்கத் தொடங்கிவிட்டனர்.

அதனால், தமிழகத்தில் இந்த புல்தரை விரிப்புகளுக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்படத் தொடங்கிவிட்டது. இதையடுத்து, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் இருந்து மதுரை, கோவை, சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செயற்கைமுறையில் தயாரிக்கப்படும் விதவிதமான புல்தரைகள் அதிகளவு விற்பனைக்கு வரத்தொடங்கிவிட்டன.

இதுகுறித்து மதுரை சோழவந்தான் அருகே கீழமாத்தூரில் இந்த செயற்கை புல்தரை விற்பனை, உற்பத்தியில் ஈடுபடும் பூமணி கூறியதாவது:

கட்டிடங்கள், வீடுகள் கட்டுவதால் இயற்கையான புல்தரைகள் அழிந்து வருகின்றன. குடியிருப்பு பகுதியில் இயற்கையாக முளைத்த புல்களை அகற்றி சிமெண்ட் தரை, பேவர் பிளாக் கற்கள் பதிப்பதால் ஈரப்பதம் குறைந்து வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகிறது. அதனால், மதுரை போன்ற நகரங்களில் கோடை காலத்தில் ஏசி இல்லாமல் வீடுகளில் இருக்க முடியவில்லை. புல்தரைகளில் ஜி-2 கிராஸ், கொரியன் கிராஸ், மெக்ஸிகன் கிராஸ், பப்பலோ கிராஸ், மணிலாப்புல் மற்றும் குட்டை பெர்முடா உள்ளிட்ட பல்வேறு வகை புல் தரைகள் உள்ளன. இவற்றில் கொரியன் கிராஸ், மெக்ஸிகன் கிராஸ் வகை புல்தரைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இந்த புல்தரைகள் ரத்தினக் கம்பளம் விரித்தால்போல் பச்சை பசேலென்று பார்ப்போரைக் கவர்கிறது. காலையில் வெறும் காலில் இந்த புல்தரையில் நடக்கும்போது நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம், கோபம் அதிகமாகும்போது இந்த புல்தரைகளில் அமர்ந்து ஓய்வெடுத்தால் மன இறுக்கம் குறைந்து அமைதி ஏற்படுகிறது.

ஒரு வீட்டில், அலுவலகத்தில் சிறிய காலியிடம் இருந்தால்கூட அந்த குறிப்பிட்ட பகுதி பசுமையாக இருக்க இதுபோன்ற புல்தரைகளை அமைக்கலாம். இந்த புல்தரைகள் தண்ணீரை சேமிக்கின்றன. வீட்டைச் சுற்றிலும் ஈரப்பதத்தை இருக்க செய்து வீட்டுக்குள் குளுமை ஏற்பட செய்கிறது. வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் கூடுதல் அழகையும் தருகிறது. இந்த புல்தரைகளில் வாஸ்து புல்செடிகளும் உள்ளன.

தற்போது வீடுகள், வீட்டுத்தோட்டங்கள், அலுவலகங்களுக்காக இந்த புல்தரைகளை வாங்கிச் செல்கின்றனர். ஒரு சதுரஅடி புல்தரையின் மதிப்பு ரூ. 30. 2-க்கு 2 அளவில் அமைந்த 4 சதுரஅடி புல்தரை ரூ.120. கொரியாவைப் பிறப்பிடமாகக் கொண்டதால் அங்கிருந்து வந்த புல்தரைகளுக்கு கொரியன் கிராஸ் புல்தரைகள் என்றும், மெக்ஸிகோவைப் பிறப்பிடமாகக் கொண்ட புல்தரைக்கு மெக்ஸிகன் புல்தரை என்றும் அழைக்கப்படுகிறது. புல்தரை அமைப்பதற்கு மண்ணைப் பொருத்து 1/2 முதல் 1 அடி வரை ஆழப்படுத்தி செம்மண், வண்டல் மண், குப்பை கலந்து இந்த புல்தரைகளை அமைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x