Published : 02 Feb 2021 04:45 PM
Last Updated : 02 Feb 2021 04:45 PM
திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களை வருவாய்த் துறையினர் அலுவலகத்தில் இருந்துகொண்டு தோராயமாகக் கணக்கெடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சி.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மழையால் சேதமடைந்த விளைபயிர்களுக்கு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.30,000, வாழை, கரும்பு ஆகிய ஆண்டுப் பயிர்களுக்கு ரூ.1 லட்சம், மானாவாரி பயிர்களுக்கு ரூ.15,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். பகுதி அளவு சேதமடைந்திருந்தாலும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
விவசாயிகளின் அனைத்துவித வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் மற்றும் கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் பயிர்ச் சேத நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்ச் சேத கணக்கெடுப்பு விடுபட்ட பகுதிகளில் உடனடியாக கணக்கெடுப்புப் பணியைத் தொடங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் டி.தனபால், ஜி.சிவக்குமார், டிஎன்பி.பிரகாசமூர்த்தி மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் எம்.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே.முகம்மது அலி கூறும்போது, “திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து நேரில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், வருவாய்த் துறையினரோ அலுவலகத்தில் இருந்துகொண்டு தோராயமாகக் கணக்கெடுப்பு நடத்தி, அரசு ஒதுக்கீடு செய்யும் நிவாரண நிதியைப் பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் போய்விடும். எனவே, பயிர்ச் சேதங்கள் குறித்து முழுவீச்சில் நேரில் முழு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய அரசு நிதி ஒதுக்கிய பிறகு பயிர்களுக்கான நிவாரணத் தொகையைத் தருவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. முதல்வரின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது. எனவே, இதற்கென தமிழ்நாடு அரசு தனி நிதி ஒதுக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT