Last Updated : 02 Feb, 2021 04:22 PM

 

Published : 02 Feb 2021 04:22 PM
Last Updated : 02 Feb 2021 04:22 PM

தென்மாவட்ட நீர்நிலைகளுக்கு அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் வருகை: ஐரோப்பிய, மங்கோலிய நாடுகளில் இருந்து வந்துள்ளன

திருநெல்வேலி

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்களுக்கு மங்கோலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குளிர் காலத்தில் வலசை வரும் பறவைகள் அதிளவில் வந்துள்ளன. பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த 3 மாவட்டங்களிலும் தாமிரபரணி மற்றும் அதன் கிளையாறுகள் பாய்ந்தோடி வளம் சேர்க்கின்றன. இங்குள்ள ஆயிரக்கணக்கான குளங்களுக்கு தாமிரபரணி நீராதாரமாக உள்ளது. இவை லட்சக்கணக்கான பறவைகளின், குறிப்பாக குளிர் காலத்தில் வலசை வரும் பறவைகளின் புகலிடமாக உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், விஜய நாராயணம், வடக்கு கழுவூர், நயினார்குளம், ராஜவல்லிபுரம், மானூர் குளங்களும், தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம், துப்பாக்குடி குளங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பாகுளம், வெள்ளுர், கருங்குளம், ஆறுமுகமங்கலம், பெருங்குளம், மேல்புதுக்குடி சுனை போன்ற குளங்கள் பறவைகளின் சொர்க்க பூமியாக திகழ்கின்றன.

தாமிரபரணி நீர்நிலைகளில் காணப்படும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை உள்ளுர் மக்கள் பங்களிப்புடன் கடந்த 2011-ம் ஆண்டு முதல் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் மேற்கொண்டு வருகிறது.

11-வது கணக்கெடுப்பு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 29 -ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின்போது குளங்களில் அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், மங்கோலியாவிலிருந்தும், இமயமலை பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பயணித்து இந்த பறவைகள் தென்மாவட்ட நீர்நிலைகளில் வந்து தங்கியிருப்பதாக அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மு. மதிவாணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பூமியிலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துவரும் சிறப்புமிக்க வரித்தலை வாத்து சிவந்திப்பட்டி குளத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளன. மங்கோலியாவிலிருந்து இவை இங்கு வந்திருக்கின்றன. இதுபோல் திருநெல்வேலி பகுதியிலுள்ள குளங்களில் நாமத்தலை வாத்து, நீலச்சிறகு வாத்து, தட்டைவாயன் போன்ற பறவைகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளன. தைலான் குருவி, ஆலா போன்ற பறவைகள் இமயமலை பகுதிகளில் இருந்து வந்து கூடு கட்டியிருக்கின்றன.

திருநெல்வேலி நயினார்குளக்கரையிலுள்ள மருதமரம், இலுப்பை மரங்களில் பாம்புத்தாரா பறவைகளின் நூற்றுக்கணக்கான குஞ்சுகளை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு இப்பகுதியிலுள்ள பனைமரங்களில் சாம்பல் நாரை வகை பறவைகள் அதிகமிருந்தன. இவ்வாண்டு அவற்றை பார்க்க முடியவில்லை. இதுபோல் நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்ககாகங்களின் கூடுகளும் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் அதிகம் தென்பட்டன.

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தாமிரபரணி நீர்நிலைகளில் பறவைகள் காணப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இப்பறவைகள் வருகை புரியும் குளங்கள் ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல், ஆகாயத்தாமரை செடிகளின் பெருக்கம், நீர்நிலைகளின் கரைகளை திறந்தவெளி கழிப்பிடமாக்குதல் போன்ற காரணங்களினால் பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

பெரும்பாலான குளங்களில் மதுபாட்டில்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு நீர்நிலைகளை நாசம் செய்வதையும், பறவைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதையும் தடுக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x