Published : 02 Feb 2021 01:59 PM
Last Updated : 02 Feb 2021 01:59 PM
நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பி மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜகவினரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பாலு இன்று வெளியிட்ட அறிக்கை:
“நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசி- தமிழகத்தில் உள்ள மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பது ஒன்றையே இலக்காகக் கொண்டு பாஜகவில் உள்ள மாநிலச் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் போன்றவர்கள் பேசி வருவதும், அவர்களுக்கு அனைத்துவித ஊக்கமும் அளித்து பாஜக தலைமை காப்பாற்றி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது.
இதுபோன்ற நபர்களை தன் மனம் போன போக்கில் பேசவிட்டு- பிறகு கண்டனங்கள் எழுந்த பிறகு கண்துடைப்பிற்காக கைது செய்கிறது அதிமுக அரசு. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து கருத்துச் சொன்னால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது, ஒரு துண்டுப் பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது என்றெல்லாம் பாஜகவின் மனம் குளிர காவல்துறையைப் பயன்படுத்தும் அதிமுக அரசுக்கு மதவெறிப் பேச்சுகளை வழக்கமாகத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பாஜகவில் உள்ள கல்யாணராமன் போன்றவர்களையோ சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையோ கண்டு தமிழக காவல்துறையும் அஞ்சுகிறது. அதிமுக அரசும் அப்படிப் பேசும்- அல்லது கருத்துத் தெரிவிக்கும் பாஜகவினரை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கைகட்டி எட்டி நிற்கிறது.
திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, பாஜகவினர் மீது ஏதாவது பொதுவான கருத்தைக் கூறிவிட்டாலே கைது- சிறையிலடைப்பு. தேசியக் கொடியை அவமதித்தாலும் அவர்களுக்கு காவல்துறையே மனமுவந்து மன்னிப்பு வழங்குகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொச்சைப்படுத்தி பேசினாலும் உயர் நீதிமன்றத்தின் மீதே அவதூறு பரப்பினாலும் அது பாஜகவினர் என்றாலோ அல்லது பாஜக ஆதரவு பெற்றவர்கள் என்றாலோ அதிமுக அரசு அஞ்சி நடுங்கி ஒதுங்கி நிற்கிறது.
அதிமுக அரசின் கையாலாகாத தனத்தைப் பயன்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு எதிராக நபிகள் நாயகம் பற்றிப் பேசிவருவதை அதிமுக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேட்டுப்பாளையத்தில் அவதூறாகப் பேசிய கல்யாணராமனைத் தாமதமாக கைது செய்தது மட்டும் போதாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT