Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM
மத்திய அரசின் 2021- 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து, திருப்பூர் தொழில்துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித் துள்ளனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக அகில இந்திய தலைவர் ஏ.சக்திவேல்: செயற்கை நூலிழையினால் உருவாக்கப்பட்ட அடிப்படையிலான ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம். தொழில்நுட்ப ஜவுளிக்கான ரூ.10683 கோடி உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமும், 3 ஆண்டுகளில் நாட்டில் 7 ஜவுளி பூங்கா அமைப்பதற்கான திட்டமும் சிறப்பானது.
இதன்மூலமாக ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். உட்கட்டமைப்பு வசதிக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, நைலான் மீதான வரியை குறைப்பது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறைக்கு ரூ.15700 கோடி ஒதுக்கீடு சிறப்பானது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது. ஆடை உற்பத்தி துறை, சுகாதாரம், வேளாண்மை, உட்கட்டமைப்பு, நிதி மற்றும் திறன் மேம்பாடு என அனைத்து முக்கிய துறைகளுக்கான சிறப்பான பட்ஜெட்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்: எதிர்பார்த்த உற்சாகத்தை மத்திய பட்ஜெட் அளிக்கவில்லை. விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. சீனாவை போன்று இந்தியாவும் வளர்ச்சி பெறும் வகையில்,7 மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
வரி இல்லாமல் இருந்த பருத்தி இறக்குமதிக்கு, தற்போது 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் நூல் விலை உயர்வுக்கு மேலும் வழிவகுக்கும். தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைக்க வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. மேலும் எளிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. அரசு அறிவித்த திட்டங் கள் நடைமுறைக்கு வந்தால்தான் தெரியும்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத் (சைமா) தலைவர் ஏ.சி. ஈஸ்வரன்: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு, 7 ஜவுளி பூங்காக்கள் தொடக்கம், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம். வீட்டு வசதிக்கான ஏற்பாடுகள், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறைக்காக நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது, சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை முழுமையாக நடைமுறைக்கு வரும்போது பொருளாதாரம் மேம்படும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் (டீமா) தலைவர் முத்துரத்தினம்: சிறு, குறு தொழில்களுக்கு கண் துடைப்பாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. ஜவுளித்துறை கண்டுகொள்ளப் படவில்லை. கரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட பின்னலாடைத் துறை கடும் பாதிப்பை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வரும் வகையில், சிறப்பு அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் இல்லாதது ஏமாற்றமே. ஜவுளித் தொழிலுக்கு எந்த ஒரு ஆதரவும் அளிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT