Published : 16 Nov 2015 01:07 PM
Last Updated : 16 Nov 2015 01:07 PM
குப்பைத் தொட்டிகள் இருந்தாலும், குப்பையை ரோட்டில் போடும் பொதுமக்களின் போக்கை மாற்றும் நோக்கில் பசுமைக்குடில்களை அமைத்து குப்பைகளை அதில் போடுமாறு வலியுறுத்தி வருகிறது ஓர் ஊராட்சி.
ஆனால் மக்கள் தன் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை. பசுமைக்குடில்கள் இருந்தாலும் அதற்கு வெளியேதான் குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.
கோவை அருகே உள்ளது பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே குப்பைத் தொட்டிகள் இருந்தன. குப்பையை தொட்டியில் போடாமல் வெளியே போடுவது, குப்பைகளுக்கு தீவைப்பது போன்ற காரணங்களால் குப்பைத் தொட்டிகள் ஓட்டை விழுவதும், சேதமாவதும் சகஜமாகி வந்தன.
தவிர பல இடங்களில் புதிய காலனிகள் உருவாகி வந்ததால், அவர்கள் குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தால் குப்பையை சாலையோரங்களிலேயே போட்டு வந்தனர். இப்படி குப்பையைப் போட்டு சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்தக்கூடாது. அதை மீறி ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கைப் பலகை ஊராட்சித் தலைவர் சார்பாக வைக்கப்பட்டது. அந்த எச்சரிக்கையும் பயன்தரவில்லை. இதை சரிப்படுத்த ஊராட்சி சார்பாக புதிய முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது, ‘குப்பைத் தொட்டிக்கு பதில் காய்கறிகள் வளர்க்க பயன்படுத்தும் பசுமைக்குடில்களுக்கு பயன்படும் பச்சை நிற வலைகளை நான்கு புறமும் கட்டிவைத்து அதில் குப்பை போடச் சொல்லலாம். இதைப் பார்த்தாலாவது அதைச்சுற்றி குப்பை போடுவதை தவிர்ப்பார்கள். பசுமைக்குடில் தடுப்பை எளிதாக விலக்கி, குப்பையையும் லாரியில் ஏற்றலாம்’ என்று முடிவு செய்தது.
முதல்கட்டமாக, முக்கிய சாலைகளின் ஓரம் மக்கள் குப்பை போடும் இடங்களை கண்டறிந்து 4 இடங்களில் மட்டும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு இப்படிப்பட்ட பசுமைக்குப்பை தடுப்புகளை ஏற்படுத்தியது ஊராட்சி. இருந்தும் பயனில்லை. குப்பைகளை பசுமை தடுப்புக்குள் கொட்டாமல் வெளியிலேயே வழக்கம் போல் கொட்டி வருகின்றனர்.
உதாரணமாக, ஆறுமுகக்கவுண்டனூரிலிருந்து பேரூர் செல்லும் வழியில் கோவைப்புதூர் பிரிவு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பின்புறம் சாலையோரத்திலேயே குப்பையை போட்டு வந்தனர். அபராத எச்சரிக்கையையும் மீறி இப்போக்கு தொடர்ந்தது. எனவே பசுமைக்குடில் தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் குப்பை போடுமாறு வலியுறுத்தியது ஊராட்சி. என்றாலும் கடந்த 5 நாட்களாக இங்கே பசுமைக்குடில் தடுப்புகளை விட்டு வெளியிலேயேதான் குப்பை நிறைந்துள்ளது.
இது குறித்து பேரூர் செட்டிபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.பி.பெருமாளிடம் பேசியபோது, ‘ஆறுமுகக்கவுண்டனூரிலிருந்து பேரூர் செட்டிபாளையம் வரும் சாலையில் சுமார் 3 கிமீ தூரத்தில் மட்டும் சுமார் 10 இடங்களில் சாலையோரமே மக்கள் குப்பையை போடுகின்றனர். அதில் 4 இடங்களில் இப்படி பசுமைக்குடில் வலைத்தடுப்புகளை ஏற்படுத்தி குப்பையை அதிலேயே கொட்டுமாறு வலியுறுத்தினோம். இருந்தாலும், வெளியேயே குப்பை கொட்டினால் என்னதான் செய்வது. இதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப் போகிறோம். இதுபோலவே புதிய காலனிகள் 10 இடங்களுக்கு மேல் குப்பைத் தொட்டிகளுக்கு பதில் பசுமைக்குடில் வலைகளை போட திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைத்தால்தானே திட்டம் வெற்றி பெறும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT