Published : 25 Nov 2015 08:47 AM
Last Updated : 25 Nov 2015 08:47 AM

பொதுவாழ்வுக்காக சொந்த வாழ்வையே துறந்தவர்: எளிமையின் அடையாளம் ஏ.எஸ்.பொன்னம்மாள் ‘அக்கா’

ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரண மாக வாழ்ந்து காட்டியவர் திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.பொன்னம்மாள் (88). இவர் 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர். பொது வாழ்வில் கக்கனுக்கு அடுத்து அப்பழுக்கற்ற, நேர்மையான, எளிமையான காங்கிரஸ் எம்எல்ஏ எனப் பெயரெடுத்தவர்.

காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இவரை ‘அக்கா’ என்றுதான் அழைப்பார்கள். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி மட்டு மல்லாது காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆறு தமிழக முதல்வர்களுடன் நட்பு பாராட்டியவர். கருணாநிதிக்கு தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

முதுமை காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாகவே தீவிர அரசிய லில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே இருந்தார். கடந்த மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பொன்னம் மாள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ராகுல்காந்தி ஆறுதல்

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அலைபேசி மூலம் பொன்னம்மாளுக்கு ஆறுதல் கூறிய தோடு, அவரை ஆமதாபாத் புற்று நோய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

ஆனால், விமானத்தில் செல்ல அவரது உடல்நிலை ஒத்துழைக்காத தால் மதுரை அரசு மருத்துவ மனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்றார். கடந்த வாரம் வீட்டுக்குத் திரும்பிய நிலையில் பொன்னம்மாளுக்கு மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமடைந்து நேற்று இறந்தார்.

தியாகம்

பொன்னம்மாள் திருமணம் செய்துகொண்டாலும், தனது தங்கை செல்லத்தாயை கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து பொது வாழ்வுக்காக தனது சொந்த வாழ்க் கையையே தியாகம் செய்தவர்.

பொன்னம்மாளின் ஆரம்பகால அரசியலில் அவருடன் இருந்த சுதந்திரப் போராட்ட தியாகி வத்தல குண்டுவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை(91), அவரைப் பற்றிய நினைவுகளை ‘தி இந்து’ வுடன் பகிர்ந்து கொண்டார்.

எளிய விவசாய குடும்பம்

ஏ.எஸ்.பொன்னம்மாள் நிலக் கோட்டை அருகே அழகன்பட்டியில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு 1947-52ம் ஆண்டு வரை, பழநியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் வார்டனாக வேலை பார்த்தார். இவரது சித்தப்பா பழநி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பாலகிருஷ்ணன். அப்போது ஒரு முறை பழநிக்கு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வந்திருந்த போது சித்தப்பா பாலகிருஷ்ண னுடன் சென்று அவரை நேரில் சந்தித்து பேசும் அரிய வாய்ப்பு பொன்னம்மாளுக்கு கிட்டியது. நேருவுடனான சந்திப்பே காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு அளவற்ற ஈர்ப்பு ஏற்படவும், அரசியலில் ஈடு படும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு பெண்ணாக இவரது அரசியல் ஈடுபாட்டை அறிந்த காமராஜர், இவருக்கு 1957-ம் ஆண்டு நிலக்கோட்டை தொகுதி யில் போட்டியிட வாய்ப்பளித்தார். தொடர்ந்து பழநி, சோழவந்தான், மீண்டும் நிலக்கோட்டை என மாறி மாறி போட்டியிட்டு 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 1996-ல் அதிமுக கூட்டணியை விரும்பாமல் காங்கிரஸை எதிர்த்து தமாகாவை தொடங்கிய ஜி.கே. மூப்பனாருக்கு பொன்னம்மாள் பக்கபலமாக இருந்தார். மூப்பனார் மறைவுக்குப் பின் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

ஆடம்பரமற்ற எளிமை

பொன்னம்மாள், எப்போதும் சாதாரண கிராமத்து பெண்கள் அணியும் சேலையைத்தான் உடுத்து வார். எங்கு சென்றாலும் பஸ்ஸில் தான் பயணம் செய்வார். இவரது ஆடம்பரமில்லாத எளிமை, மக்கள் பிரச்சினைகளை அவர் எதிர் கொண்ட விதம், எல்லோரும் அவரை எளிதாக அணுக முடிந்த தால் காங்கிரஸிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி பொன்னம்மாளை தனியாக அடையாளப்படுத்தியது.

ஈழத் தமிழர்களுக்காக ராமேசுவரத்தில் கடலில் இறங்கி போராடியவர். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இவரது தொகுதி யான நிலக்கோட்டை. இப்பகுதி யில் இன்று அதிகமான பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெண்கள் கல்லூரி, கிராமங்கள் தோறும் சாலை அமையக் காரண மாக இருந்தவர் பொன்னம்மாள். மஞ்சளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வத்தலகுண்டு பாலம், ஆடிசாபட்டி பாலம், ராமநாயக்கன்பட்டியில் வைகை ஆற்றுப் பாலம் ஆகிய வற்றை கொண்டு வந்தவர். இந்த பாலங்கள் வருவதற்கு முன் விவசாயிகள், சுற்றுவட்டார கிராம மக்கள், பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றனர் என்றார்.

பொன்னம்மாளுடன் பணியாற் றிய தமாகா திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் ராமதாஸ் கூறும்போது, ‘பொன்னம்மாள் எப் போதும், எங்கு சென்றாலும் தனது தொகுதி சம்பந்தமான வளர்ச்சித் திட்ட கோப்புகளுடனேயே பயணம் செய்வார். தனது தொகுதிக்கு பிடிவாதமாக பல திட்டங்களைக் கொண்டு வந்தவர்.

1996-ல் முதல்வராக இருந்த கருணாநிதி, ஒரு பெண்கள் கல்லூரியை அறிவிக்க இருந்தார். அதை தங்கள் தொகுதிக்கு பெறுவதில் திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கும், பொன்னம்மாளுக்கும் போட்டியே ஏற்பட்டது. பிடிவாதமாக நின்று, அந்த கல்லூரியை நிலக்கோட் டைக்கு கொண்டு வந்தார் பொன்னம் மாள். இன்று தாழ்த்தப்பட்ட, ஏழை பெண் குழந்தைகள் பட்டதாரிக ளாக உயர வழிவகுத்தது பொன்னம் மாளின் பிடிவாத முயற்சியே’ என்றார்.

‘அக்கா’ அடைமொழி வந்தது எப்படி?

1984-ம் ஆண்டு பழநி தொகுதியில் பொன்னம்மாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு வந்த எம்ஜிஆர் பொன்னம்மாளைப் பார்த்ததும் ‘‘அக்கா இங்க வாங்க” என அழைத்துப் பேசினார். எம்ஜிஆரைத் தொடர்ந்து மற்ற தலைவர்களும், பொதுமக்களும் இவரை ‘அக்கா’ என அழைக்கத்தொடங்கி அதுவே கடைசிவரை நிலைத்துவிட்டது.

ஒருமுறை பொன்னம்மாளை வீட்டுக்கு அழைத்து கவுரவித்த எம்ஜிஆர், அதிமுகவில் இணைந்துவிடுங்கள். அமைச்சர் பதவி தருகிறேன் என்றாராம். அதற்கு அவரோ, ‘ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கொள்கைகளுடன் வாழ்ந்து பழகிவிட்டேன், என்னால் சட்டென்று திராவிடக் கொள்கைக்கு மாற முடியாது’ என்று அன்புடன் மறுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x