Published : 01 Feb 2021 07:39 PM
Last Updated : 01 Feb 2021 07:39 PM

மினி கிளினிக்குகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்: மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை 

சென்னை

மினி கிளினிக்குகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுதல் தொடர்பாகவும், இதர கோரிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளருக்குத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகம் முழுவதிலும் அரசாணை (G.O.M.S-530)-ன்படி கடந்த 15.12.2020 முதல் 600க்கும் மேற்பட்ட மினி கிளினிக்குகள், புதிய மருத்துவப் பணியிடங்கள் இன்றி ஏற்கெனவே துறையில் பணிபுரியும் RBSK, MMU மற்றும் இதர மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்களை வைத்து, இதற்கெனப் பிரத்யேகக் கட்டிடங்கள் இன்றி கிராம சுகாதாரக் கட்டிடங்களிலும், பஞ்சாயத்துக் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன.

மினி கிளினிக்குகள் தொடர்பாக 14.12.2020 அன்று மின்னஞ்சல் மூலமாகவும், நேரடியாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளைச் சமர்ப்பித்தோம்.

மினி கிளினிக்குகளுக்கு மாற்றுப் பணியில் அனுப்பப்படும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, இடையில் 12 மணி முதல் 4 மணி வரை இடைவேளை என வழக்கமான பணி நேரத்திற்குச் சம்பந்தமில்லாமல் இரவு 8 மணி வரை ஆண், பெண் மருத்துவர்களுக்குக் கழிப்பிடம், ஓய்விடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எல்லாவற்றிற்கும் சிரமப்பட்டு வழக்கமான பணிகளைச் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் பல்வேறு சுகாதார மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக அநேக இடங்களில் புதிய மினி கிளினிக்குகளைத் தொடங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். கடந்த 22.01.2021 அன்று மினி கிளினிக்குகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில், மினி கிளினிக்குகள் ஓராண்டு மட்டுமே தற்காலிகமாகச் செயல்படும் என்றும் மாவட்டத் துணை இயக்குநரக அலுவலகங்களில் தற்காலிக மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவ அலுவலர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு கீழ்க்கண்ட பிரச்சினைகளில் தீர்வு ஏற்படுத்திடக் கோரிக்கை விடுக்கிறோம்.

மினி கிளினிக்குகளுக்கெனத் தற்காலிக மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை தற்போது மாற்றுப் பணியில் பணிபுரியும் RBSK, MMU மற்றும் இதர மருத்துவர்களை வழக்கமான பணி நேரங்களில் அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணிபுரிய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்.

தற்போது மாற்றுப் பணியில் இருக்கும் நிரந்தர மருத்துவ அலுவலர்களுக்கு, ஏதோ அவர்கள் பிரத்யேகமாக மினி கிளினிக்குகளுக்கென நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் என்ற தோரணை உருவாக்கப்பட்டு அவர்களின் விடுப்பு சம்பந்தமான CL, COL, பொது அரசு விடுமுறைகள், பண்டிகைக் கால விடுமுறைகள் ஆகியவை மாவட்டச் சுகாதார நிர்வாகத்தால் மறுக்கப்படும் போக்கைக் கைவிட வேண்டும். மேலும் அவர்களுடைய அனைத்து விடுப்பு சம்பந்தமான தார்மீக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

மாவட்டத் துணை இயக்குநரக அலுவலகங்கள் மூலமாக புதிய மருத்துவப் பணியிடங்கள் தற்காலிகமாக உருவாக்கப்படும் வரை அடுத்த கட்ட மினி கிளினிக்குகளைத் தொடங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறோம்.

மினி கிளினிக்குகளுக்கென புதிய கட்டிடம், கழிப்பிட வசதி, ஓய்வறை, உணவு,வாகன வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக உறுதி செய்திட வேண்டும்.

மினி கிளினிக்குகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் விடுப்பில் சென்றாலோ அல்லது விடுப்புக்காக விண்ணப்பித்தாலோ வேறு மருத்துவப் பணியாளர்களை மாற்றம் செய்துகொள்ள மிகவும் சிரமமாகவும், விடுப்பு எடுக்க முடியாத சூழலும் உருவாகிறது. ஆகவே மினி கிளினிக்குகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு விடுப்பு சம்பந்தமாக முறையான வழிகாட்டு நெறிமுறைகளைத் துறை சார்பில் தெரிவிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு “ஞாயிற்றுக்கிழமை” வார விடுமுறை என்று வரையறை இருக்கும் பட்சத்தில் மினி கிளினிக்குகளில் மாற்றுப் பணியில் இருக்கும் அரசு மருத்துவ அலுவலர்களுக்கு “சனிக்கிழமை” விடுமுறை என்பது பணியாளர் நலனுக்கு எதிரானதாக அமையும். ஆகவே, அரசாணையில் சீர்திருத்தம் செய்தோ அல்லது துறை சார்ந்த உத்தரவின் மூலமாகவோ வழக்கமான வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்று உத்தரவை வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (MRB) மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 700 பேரில் 462 மருத்துவர்கள் புதிய மருத்துவக் கல்லூரிகளில் பணியமர்த்தப்படுவதாக அறிவிப்பு வந்தது. பொது சுகாதாரத் துறையில் (DPH) சுமார் 800க்கும் மேற்பட்டகாலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் தற்பொழுது கரோனா தடுப்பூசி போடுதல், மினி கிளினிக் மாற்றுப் பணிகள், எதிர்வரும் போலியோ சொட்டு மருந்து முகாம் மற்றும் வழக்கமான நடமாடும் மருத்துவ முகாம்கள், கரோனா தடுப்பு முகாம்கள் என மருத்துவ அலுவலர்களின் தேவை மிக அதிகமாக உள்ளதால் 800க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை MRB மூலமாக அடுத்தடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி நியமனங்களை வழங்கி உடனடியாக பொது சுகாதாரத் துறையில் பணியமர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஏற்கெனவே தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 50% இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் மாநில அரசுகள் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தலாம் என்று 31.08.2020 அன்று நீதிபதி அருண்மிஸ்ரா அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதுநிலை மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தச் சட்டம் இயற்ற வேண்டும்.

தொடர்ந்து 50 நாட்களாக சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் (கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி) இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே அங்கும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி இயல்புநிலை திரும்ப முடிவு எடுக்கக் கோரிக்கை விடுக்கிறோம்.

பொது சுகாதாரத் துறையில் சமுதாய அளவில் காய்ச்சல் முகாம், தடுப்பூசி முகாம், கொள்ளை நோய்த் தடுப்பு, பேரிடர் மீட்பு, தாய் சேய் நலப்பணிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகிய சமுதாய சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவ அலுவலர்களுக்கு உரிய படிகள் (Community care allowances) துறை சார்ந்த பதவி உயர்வுகள் ஆகியவற்றைப் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x