Published : 01 Feb 2021 05:07 PM
Last Updated : 01 Feb 2021 05:07 PM
சுயசார்பு முழக்கத்தில் அந்நிய முதலீட்டுக்கு நாட்டை விற்பனை செய்யும் வண்ணம் நிதி நிலை அறிக்கை இருப்பதாக இந்தியக் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2021) நாடாளுமன்றத்தில் 2021 - 22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் பொருளாதாரத் தேக்கம் போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் என நாட்டின் உற்பத்தித் தொழில்கள் மரணப் படுக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவை மறுவாழ்வுக்காக உயிர் தண்ணீர் கேட்டு கதறிக் கண்ணீர் வடித்து வருகின்றன.
வரலாறு காணாத அளவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், நாடு முடக்கம் கோடிக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகளை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பரிதவித்து வருகின்றனர்.
வேளாண்மைத் துறையில் நீடித்து வந்த நெருக்கடி வெடித்து தொடர் போராட்டங்களாக வெடித்துள்ளன. இதுபோன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மத்திய நிதி நிலையறிக்கை பார்க்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்டது.
விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக டீசல் லிட்டருக்கு தலா ரூ4-ம், பெட்ரோல் லிட்டருக்கு தலா ரூ.2.50-ம் செஸ் வசூலிப்பதாக அறிவித்தள்ளது. விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தைக் காட்டி, எரிபொருள் நுகர்வோர் மீது சுமை ஏற்றுவது வர்த்தக சூதாட்ட அரசியல் சதி என்பதை எளிதில் உணரமுடியும்.
வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியுள்ளது. ஜனநாயக உரிமைகளை மறுத்து, நியாயத்தின் குரலை அடக்குவதற்கு உள்துறை நிர்வாகத்திற்கு நேசக் கரம் நீட்டியுள்ளது.
“சுயசார்பு இந்தியா” என்ற பெருமுழக்கம் செய்து, அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் வஞ்சக எண்ணம் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கை, நாட்டை அந்நிய முதலீட்டிற்கு அடகுவைத்து அடிமைப்படுத்தும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு நாட்டு மக்களை எச்சரிக்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT