Published : 01 Feb 2021 04:28 PM
Last Updated : 01 Feb 2021 04:28 PM
பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகளையும், மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான அறிவிப்புகள் இல்லை. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றும் முயற்சியே மத்திய பட்ஜெட்டில் உள்ளது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சஙகம் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“மத்திய பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடும் ஏமாற்றம் அளிக்கிறது. கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பொது சுகாதாரத் துறையை, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அத்தகைய சூழலில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதியான ரூ 2.23 லட்சம் கோடி போதாது. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியிலிருந்துதான், பிரதமர் காப்பீடு திட்டத்திற்கும் நிதி வழங்கப்படுகிறது. பிரதமர் காப்பீடு திட்டத்தின் மூலம் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளுமே பெரும் பயனை அடைந்து வருகின்றன.
குறைவான நிதி ஒதுக்கீட்டால் அரசு மருத்துவமனைகள் வலுவிழந்து வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்துதான், கரோனா தடுப்பூசிகளுக்கும் நிதி வழங்கப்படும் எனத் தெரிகிறது. கரோனாவைத் தடுத்திட தடுப்பூசி அவசியம்.
மிக விரைவாக, குறைந்தபட்சம் 70 விழுக்காடு மக்களுக்காவது தடுப்பூசியை வழங்கிட வேண்டும். அப்பொழுதுதான் தடுப்பூசிகள் மூலம் கரோனா பரவலைத் தடுக்க முடியும். அந்த இலக்கு குறித்த உத்தரவாதம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஏற்கெட்னவே, வெறும் 22 விழுக்காடு மக்களுக்கே (30 கோடி) தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை.
ஆனால், அதேசமயம் அதிக விலை கொடுத்து விலைக்கு வாங்கும் கரோனா தடுப்பூசிகளைப் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. ஏறத்தாழ 30 லட்சம் தவணைகளுக்கான கரோனா தடுப்பூசி மருந்துகளை, அன்பளிப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வாரி வழங்குவது நமது மக்களின் நலன்களுக்கு எதிரானது.
இந்திய மக்களின் வரிப் பணத்தை, வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கிடச் செலவு செய்வது, மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். நமது நாட்டு மக்களின் தேவைகளுக்கே தடுப்பூசிகள் போதுமானதாக இல்லாதபொழுது, நமது மக்கள் பணத்தில் வெளிநாடுகளுக்குக் கரோனா தடுப்பூசிகளை வாரி வழங்குவது சரியல்ல.
கரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்திருப்பது, கரோனாவைத் தடுப்பது என்பதைவிட, அத்தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பெரும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தை அதிகப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ரூ.35 ஆயிரம் கோடி செலவில் எத்தனை விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்பது குறித்தோ, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்குவது குறித்தோ எந்த அறிவிப்பும் இல்லை.
இங்கிலாந்தில் ரூ.159க்கு ஒரு தவணை கோவிசீல்டு தடுப்பூசி மருந்து கிடைக்கிறது. ஆனால், அதே மருந்தை இந்திய அரசு அதிக விலை கொடுத்து ரூ.200க்கு வாங்குகிறது. கோவேக்சின் தடுப்பூசியை ஒரு தவணைக்கான மருந்தை ரூ.295 கொடுத்து அதிக விலைக்கு வாங்குகிறது. தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு கூடுதல் விலையை நிர்ணயம் செய்துள்ளது சரியல்ல. அதிக விலை கொடுத்து கரோனா தடுப்பூசியை வாங்குவதால், மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ 35 ஆயிரம் கோடி, தனியார் நிறுவனங்களுக்கே அதிக லாபமாகச் செல்ல வாய்ப்புள்ளது.
கரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் நேரடியாக வாங்க அனுமதிக்காதது, மாநில உரிமைகளுக்கு எதிரானது. தடுப்பூசியை வாங்கும் முழுமையான ஏகபோக உரிமையை மத்திய அரசு , தன் வசமே வைத்திருப்பது, ஊழல் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகளையும், மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான அறிவிப்புகள் இல்லை. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதியைத் தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றும் முயற்சியே மத்திய பட்ஜெட்டில் உள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், தனியார் நிறுவனங்களுக்கு விருந்து படைக்கும் முயற்சியே மத்திய பட்ஜெட்டில் உள்ளது”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT